full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“காலா” வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்!!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “காலா” திரைப்படம் உலகமெங்கும் வருகிற 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாக வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

“காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை கர்நாடகாவில் வெளியாக அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புகள் ஏற்கனவே கூறி வந்தன. காலா படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து 11 அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த நிலையில், அம்மாநில திரைப்பட வர்த்தக சபை காலா படத்திற்கு தடை விதித்துள்ளது.

இதற்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், தேவைப்பட்டால் இது தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களையும் சந்தித்து பேசுவோம் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர்,

“காலா திரைப்படத்தை தடை செய்வது குறித்து அரசு தரப்பிலிருந்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதையெல்லாம் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை பார்த்துக் கொள்ளும். மக்களின் முடிவில் தலையிட விரும்பவில்லை” என கூரியிருக்கிறார்.

முதல்வரின் இந்த பதில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினரின் முடிவை ஆதரிப்பது போல் உள்ளதால், கர்நாடகத்தில் “காலா” திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் அங்கிருக்கும் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.