தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமவுலிக்குக் கொரோனா

News

இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தல் என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமவுலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ”

சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அது தானாகவே சரியாகிவிட்டாலும், நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். இன்று பரிசோதனை முடிவில் மிதமான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். ஆனால், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம்”.