உருவ கேலியும் ஒருவகை வன்முறைதான் – இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன்

cinema news
0
(0)

ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் படம் காம்ப்ளக்ஸ். படத்தின் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் படத்தை பற்றி கூறியதாவது :

என் பெயர் மந்த்ரா வீரபாண்டியன். நான் பொறியியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமா மீதான ஆர்வத்தில் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். நிறைய குறும்படங்கள் இயக்கி இருக்கிறேன். இயக்குனர் பாலா சாரிடம்உதவி இயக்குனராக நாச்சியார் மற்றும் வர்மா ஆகிய இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அதன் பிறகு பெரிய தயாரிப்பு நிறுவனம் மற்றும் பெரிய நடிகருக்கு தான் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால், அதற்கிடையில் காம்ப்ளெக்ஸ் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஆகையால், இதை முதலில் இயக்கி விடலாம் என்று இயக்கி முடித்து விட்டேன்.
இப்படத்தின் மையக்கரு உருவ கேலி செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும் கதை. அதாவது ஒருவரின் உருவத்தை வைத்து எடை போடுவது மிகவும் தவறு. எல்லா காலகட்டத்திலும்  உருவ கேலி என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இதை வைத்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் கூட வருகிறது. மேலும், இதை வைத்து நிறைய நகைச்சுவை காட்சிகளே எடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து பள்ளிகளில் குழந்தைகளும் அதே தவறை செய்கின்றனர். கேலி பேசுபவர்கள் பேசி விட்டு சந்தோஷமா சிரிப்பார்கள். ஆனால், பாதிக்கப்படும் குழந்தைகள் உளவியல் ரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மேலும், உன்னை யாராவது உருவ கேலி செய்தால் அதை பொருட்படுத்தாமல் நீ வெற்றி பெற்று விட்டால் பிறகு உன்னை யாரும் கேலி செய்ய மாட்டார்கள் என்று தவறான அறிவுரையும் வழங்கப்படுகிறது. இது மிகவும் பரிதாபத்திற்குரியது.

ஆகையால், உருவ கேலி செய்வது தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்படத்தை எடுத்திருக்கிறேன். கேலி பேசுபவர்களுக்கு அறிவுரை கூறும் படமாக இருக்காது. மாறாக கேலிக்கு ஆளாகுபவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.
இப்படம் இயக்கும்போது சமுதாயம் எனக்கு மிகப்பெரிய காம்ப்ளக்ஸ் கொடுத்தது. அது என்னவென்றால், இப்படத்தின் கதாநாயகன் யார் என்பது தான். முதலில் இப்படத்தை பெரிய நடிகரை வைத்து எடுத்தால் எல்லோரிடமும் சென்று சேரும் என்பதற்காக, பெரிய நடிகரை வைத்து இயக்க தான் திட்டமிட்டிருந்தேன். அதற்கு காலதாமதம் ஆகும் என்பதற்காக அந்த திட்டத்தை கைவிட்டேன்.

என் கதையில் உள்ள கேரக்டருக்கு பொருந்தக் கூடியவரை நடிக்க வைத்தால் யதார்த்தமாக இருக்கும் என்பதற்காக, உருவம் குறைவுள்ள மனிதரை வைத்து இயக்கி இருக்கிறேன். இந்த யோசனை கூட இயக்குனர் பாலா சாரிடம் நான் கற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில்தான் இப்படம் உருவாகியுள்ளது. மேலும், பாலா சாரிடம் முக்கியமாக நான் கற்றுக் கொண்டது மேக்கிங் டிஸிப்பிலின் தான். சில விஷயங்களை இப்படி தான் எடுக்க வேண்டும் என்றால் அப்படி தான் எடுப்பார். நானும் அதைப் பின்பற்றி தான் இயக்கியுள்ளேன்.
விருதுக்கான கலை படமாக இல்லாமல், மக்களுக்கான கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறேன்.

மேலும், உருவ கேலி என்பது நம் நாட்டில் மட்டுமல்லாது, உலகளாவிய அனைத்து இடங்களிலுமே உள்ளது. மற்ற சமுதாய பிரச்சனைகளை விட முக்கியமாக முதலில் பேச வேண்டிய பிரச்சனை இது தான். உருவ கேலி மட்டுமல்ல, அவர்கள் அணியும் உடைகளில் இருந்து அனைத்து விஷயங்களிலுமே இந்த கேலி இருக்கிறது. உருவ கேலிக்கு ஆளானவர்கள் பலரை நேரடியாக நான் சந்தித்துப் பேசினேன். அந்நேரத்தில் அவர்களுக்கு ஏற்படும் மனவலி, வேதனை, அழுகை னு அவர்களோடு பேசியதில் தெரிந்து கொண்டேன். பிறகு இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து, பல புத்தகங்கள் படித்திருக்கிறேன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இதுபோன்ற விஷயங்களை தானே ஊக்குவிக்கிறார்கள் என்பதை ஆழமாக யோசிக்கும்போது, ஒருவர் குண்டாக இருக்கிறார் அல்லது ஒல்லியாக இருக்கிறார் என்றால் அவர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தன்னுடைய உடலை குறைத்துக் கொள்ளலாம் அல்லது எடையை கூட்டிக் கொள்ளலாம். மற்றும் கருமை நிறத்தில் இருப்பவர்கள் தங்களை சிகப்பாக்கி கொள்ள சிகப்பழகு கிரீம் பூசிக் கொள்ளலாம். அந்த நிகழ்ச்சியின் இடையில் வரும் விளம்பரங்கள் தான் இதனை ஊக்குவிக்கின்றது என்று நான் நினைக்கிறேன்.
மக்களை உளவியல் ரீதியாக பயன்படுத்தி இதற்குப் பின் ஒரு பெரிய வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது.

திருநெல்வேலியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தேன். பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை முதல் மதிப்பெண் வாங்கும் வரை நானும் உருவ கேலிக்கு ஆளாக்கப்பட்டேன். இங்கு வெற்றி பெற்ற அனைவருமே ஒரு காலத்தில் உருவ கேலி செய்யப்பட்டவர்கள் தான். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, ஏ ஆர் ரகுமான், இயக்குனர் முருகதாஸ் ஆகிய வெற்றியாளர்கள் அவர்களின் சாதனைக்கும் உருவத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கதையின் நாயகனாக வெங்கட் செங்குட்டுவன் நடிக்கிறார். நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர் நாச்சியார் படத்தில் ஜீவி பிரகாஷ் ஜோடியாக நடித்தவர். இவானாவிடம் கதையை கூறும்போது இரண்டு கதாபாத்திரங்கள் இருக்கின்றது. இதில் நீங்கள் விருப்பப்பட்டதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவர் அக்கா பாத்திரத்தை தேர்வு செய்தார். அவர் வாழ்க்கையில் ஒன்றிய பாத்திரமது என்று கூறினார். ஆரத்யா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். எம்எஸ் பாஸ்கரின் கதாபாத்திரம் வேறு ஒரு அரசியல் பேசும். இப்படத்தில் அவர் ஞான தகப்பன் என்றே கூறலாம். இப்படம் மூலம் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலும், பாவா செல்லதுரை நடித்திருக்கிறார். பாவா செல்லதுரை சாரை வாசகர் வட்டத்தில் தெரியாத ஆளே கிடையாது. இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் தான். ஆனால், மிக முக்கிய கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கேட்டபோது, ஆர்வத்துடன் நடித்து கொடுத்தார்.குக்கு வித் கோமாளி சுதர்சன் நடித்திருக்கிறார்.

மேலும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்தவர் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. 80களில் இருந்த இளையராஜா ட்ரெண்டியாக இசையமைத்து இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. 4 பாடல்களுக்கும் நன்றாக வந்துருக்கிறது.
முழு படத்தையும் முடித்துவிட்டு தான் அவரிடம் சென்றேன். அவர் பார்த்துவிட்டு என்னுடைய இசைப்பயணத்தில் மிகச்சிறந்த படம் என்றால் அது இந்த படம்தான் என்றார். இந்த மாதிரி படங்களுக்கு இசையமைக்க தான் நான் சில காலம் ஒதுங்கி இருந்தேன் என்றும் கூறினார். பாடல்களும் பின்னணி இசையும் உணர்வுபூர்வமாக இருக்கும்.
பாடல்களை ஞானகரவேல், பாலா சீத்தாராமன் எழுதியுள்ளார்கள்,படத்தொகுப்பை சதீஷ் சூர்யா செய்கிறார். மாய பாண்டியன் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவு பர்வேஷ் செய்கிறார். இப்படத்திற்கென சில லென்ஸ்களை மும்பையில் இருந்து வர வைத்து உபயோகப் படுத்தியிருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் ஒளிப்பதிவு பெரிய அளவில் பேசப்படும்.

திருநெல்வேலி மற்றும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தினோம். படப்பிடிப்பு முழுவதும் முடித்துவிட்டோம்.. மற்ற பணிகளை இன்னும் 50 நாட்களில் முடித்து விடுவோம். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும்.

இவ்வாறு படத்தைப் பற்றி இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் கூறினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.