பாஸ் ஆனாரா சந்தானம் – “டிடி ரிட்டர்ன்ஸ்” திரை விமர்சனம்

cinema news movie review

பாஸ் ஆனாரா சந்தானம் – “டிடி ரிட்டர்ன்ஸ்” திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து பின்னர் ஹீரோவாக மாறியவர் சந்தானம். ஆனால் இவர் நாயகனாக நடித்த பெரும்பாலான படங்கள் ஓடவில்லை. பேய் பட வரிசையில் இவர் நடித்த தில்லுக்கு துட்டு 1, 2 ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சமீபத்தில் சந்தானம் நடித்த எந்த படமும் ஓடாததால் மீண்டும் பேய் பட ஃபார்முலாவை கையில் எடுத்து அவர் நடித்துள்ள படம் தான் டிடி ரிட்டர்ன்ஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம்.

முன்னொரு காலத்தில் பாண்டிச்சேரியில் ஒரு பிரஞ்சு குடும்பம் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட சூதாட்டம் நடத்தி வருகின்றனர். விளையாட்டில் தோற்றவர்களை கொடூரமாக கொலை செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் அவர்களை குடும்பத்துடன் வைத்து தீயிட்டு கொளுத்தி கொலை செய்து விடுகின்றனர். அப்படியே நிகழ் காலத்திற்கு வந்தால் சந்தானம் மற்றும் சுரபி காதலித்து வருகின்றனர். பெஃப்சி விஜயன் ஊரில் மிகப் பெரிய சாராய வியாபாரி மற்றும் ரவுடி. தனது மகன் கிங்ஸ்லிக்கும் சுரபின் அக்காவுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்கிறார். ஆனால் அக்கா ஓடிவிட தங்கையை கட்டிக்க நினைக்கிறார் கிங்ஸ்லி. இதனால் கிங்ஸ்லியை சந்தானம் கடத்தி விடுகிறார். ரூ.25லட்சம் இருந்தால் காதலியை காப்பாற்றிவிடலாம் என்ற நிலை. இது ஒருபக்கம் இருக்க முனீஸ்காந்த் குரூப் பெப்சி விஜயன் வீட்டில் உள்ள பணம் நகைகளை கொள்ளையடிக்க நினைக்கிறது. அதே நேரத்தில் போதைப் பொருள் பணத்தை மொட்டை ராஜேந்திரன் குழு சுருட்ட நினைக்கிறது. பெஃப்சி விஜயன் பணம் பல கைமாறி சந்தானத்திற்கு கிடைக்கிறது. இதனால் சந்தானம் பிரச்சினை தீர்ந்து விடுகிறது. சந்தானத்தின் நண்பர்கள் போலீஸுக்கு பயந்து மீதி பணத்தை பேய் பங்களாவில் வைக்கின்றனர். அதை எடுக்கப் போகும் போது எங்களுடன் கேம் விளையாடி ஜெயித்து விட்டு பணத்தை எடுத்துச் செல் என்கிறது பேய் குடும்பம். இறுதியில் விளையாட்டில் வெற்றி பெற்றனரா? அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்ததா? என்பதை விலா எலும்பு நொறுங்க காமெடி கலந்து கதகளி ஆடியுள்ளனர்.

சந்தானம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழைய சந்தானமாக திரும்பி வந்துள்ளார். இரட்டை அர்த்த வசனம் இல்லை, உடலை கிண்டல் செய்யவில்லை. அக்மார்க் படமாக கொடுத்த இயக்குநர் குழுவுக்கு வாழ்த்துகள். தான் மட்டுமே தனியாக தெரிய வேண்டும் என்று இல்லாமல் தன் உடன் நடிக்கும் அத்தனை பேருக்கும் சரிசமமாக இடம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார் சந்தானம். இதுதான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம். சந்தானம் அடிக்கும் ஒவ்வொரு கிண்டலுக்கும் அரங்கம் அதிர்கிறது. மேலும் மாறன், தங்கதுரை, சைதை சேது, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், பெப்சி விஜயன், கிங்ஸ்லி என படத்தில் நடித்த அத்தனை பேருமே நமது வயிற்றை பதம் பார்த்துவிட்டனர்.

பேய் படம் என்றால் கதையே இருக்காது என்பதை மாற்றி ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு கதை வைத்து அதனை ஒரே புள்ளியில் இணைத்து சாமர்த்தியமாக திரைக்கதை அமைத்துள்ளனர். பஞ்ச் வசனங்கள் அருமையாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. இந்த வாரம் திரையரங்குகளில் சென்று கட்டாயம் இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவை வாட்டி எடுத்த சைக்கோக்களுக்கு மத்தியில் நிம்மதியாக சிரித்து விட்டு வர ஏற்ற படம்.

முதல் பாதியை விட இரண்டாவது பாதி இன்னும் ரகளை. பெஃப்சி விஜயன் டே டே டே டே என கத்திக் கொண்டு போகும் சீன், ஓலா கார் புக் பண்ணி திருட போவது, மொட்டை ராஜேந்திரன் கதவுக்கு மேல் உட்கார்ந்து கொண்டு செய்யும் சேட்டைகள் என காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்துள்ளனர். டிடி ரிட்டர்ன்ஸ் – சந்தானம் ரிட்டர்ன்ஸ். ரேட்டிங் 3.5/5