full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

டியர் திரை விமர்சனம்!

டியர் திரை விமர்சனம்!

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் டியர். இப்படத்தின் கதைப்படி நாயகன் ஜிவி பிரகாஷ் குமாருக்கு சின்ன சத்தம் வந்தால் கூட தூக்கமாட்டார். அமைதியான தூக்கத்தை விரும்பும் நபர். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தூங்கும் போது சத்தமாக குறட்டை விடும் பழக்கம் உடையவர். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. குறட்டை பிரச்சனையால் இருவருக்கும் நடக்கும் ஊடல்கள், பிரச்சினைகள்தான் கதை. ஏற்கனவே இதுபோன்ற கதைக்கருவில் குட் நைட் படமும் வந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்த படம் எப்படி இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த படத்தின் சாயல் எதுவும் இதில் இல்லாமல் புதுமையான திரைக்கதை மூலம் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன்.

ஜிவி பிரகாஷ் குமார் செய்தி வாசிப்பாளர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பவர். திருமணம் ஆனபிறகு குறட்டையால் அவரது லட்சியம் பாதிக்கப்படுவது, அலைபாயும் மனதுடன் ஒருவிதமான இறுக்கமான முகத்துடன் வலம் வரும் நபராக நன்றாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் இதுபோன்ற கதாபாத்திரத்தில் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி விடுவார். இதிலும் அப்படியே. இவரது கதாபாத்திரம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜிவியின் அண்ணனாக நடித்துள்ள காளி வெங்கட், அவரது மனைவியாக நடித்துள்ள நந்தினி இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ரோகிணி, கீதா கைலாசம், இளவரசு, தலைவாசல் விஜய் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். ஜிவி யின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்று.

முதல் பாதி மொதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி முழுமையாக ரசிக்க வைத்துள்ளது. ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு ஊட்டியின் அழகை அற்புதமாக படம் பிடித்துள்ளது.‌ ருக்கேஷின் படத்தொகுப்பு நன்று. மொத்தத்தில் குறைகள் எதுவாக இருந்தாலும் அவசரப்படாமல் அமர்ந்து பேசினால் அது ஒரு குறையே இல்லை என்று தெரிந்து விடும் என்ற கருத்தை சொல்கிறது இந்த டியர். மொத்தத்தில் டியர் – லவ். ரேட்டிங் 3.5/5.