சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டு ‘பத்மாவதி’ என்ற பெயரில் பிரபல டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி சினிமா படம் தயாரித்துள்ளார். இதில் சித்தூர் ராணி பத்மினியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
பத்மாவதி படத்தை வெளியிடக்கூடாது என்று ராஜபுத்திரசேனா, கர்னி சேனா அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் கடந்த டிசம்பர் 1-ந் தேதி திட்டமிட்டப்படி பத்மாவதி படம் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே பத்மாவதி படத்தின் பெயர் பத்மாவத் என்று மாற்றப்பட்டது. என்றாலும் பத்மாவத் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று 11 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர்.
அந்த மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு ஜனவரி 25-ந் தேதி பத்மாவத் படத்தை வெளியிடலாம் என்று அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் அந்த படம் முக்கிய நகரங்களில் திரையிடப்பட உள்ளது.
இந்த நிலையில் பத்மாவத் படத்தை வெளியிட்டால் தியேட்டர்களை தீவைத்து எரிப்போம் என்று கர்னி சேனா அமைப்பினர் மிரட்டல் விடுத்தனர். இதனால் சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி பத்மாவத் படத்துக்கு தடை விதிப்பதாக குஜராத், ராஜஸ்தான், அரியானா, மத்தியபிரதேச மாநில அரசுகள் அறிவித்தன.
இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். அந்த மனுவை விசாரித்த பிறகு பத்மாவத் படத்துக்கு 4 மாநிலங்கள் விதித்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தன.
தீர்ப்பில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்திருந்தன. அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது.
அப்போது நீதிபதிகள் பத்மாவத் படத்துக்கு தடை விதிக்க மறுத்தனர். மேலும் ஏற்கனவே வெளியிட்ட தீர்ப்பில் எந்தவித மாற்றத்தையும் செய்ய இயலாது என்று தெரிவித்தனர். இதையடுத்து பத்மாவத் படத்தை எதிர்த்த மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பத்மாவத் திரைப்படத்தை முடக்குவதற்கு மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் அரசுகள் மேற்கொண்ட கடைசிகட்ட முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் பத்மாவத் திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ள ‘பத்மாவத்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓட வேண்டும் என மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் நடிகை தீபிகா படுகோனே இன்று வழிபாடு செய்தார். பலத்த பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த தீபிகா படுகோனே சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு புறப்பட்டு சென்றார்.