துல்கருடன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தன்ஷிகா

News

தமிழில் விக்ரம் – ஜுவா கூட்டணியில் `டேவிட்’ என்ற படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் இந்தியில் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் `சோலோ’ என்ற படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் – ஆர்த்தி வெங்கடேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான சாய் தன்ஷிகா இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். ஸ்ருதி ஹரிஹரன், சாய் தமங்கர், பிரகாஷ் பேலவாடி, அன்சன் பால், அன் அகஸ்டின், சதீஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் தன்ஷிகா `சோலோ’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக, பார்வையில்லாத நடனப் பெண்ணாக தன்ஷிகா நடிப்பதாக இயக்குநர் பிஜாய் நம்பியார் தெரிவித்துள்ளார். இப்படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், மூன்றாவது கட்டப் படப்பிடிப்பில் தன்ஷிகா இணைகிறார்.

கலையரசன் – சாய் தன்ஷிகா நடித்துள்ள `உரு’ படம் வருகிற மே மாதம் 19-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர `காலக்கூத்து’, `கிட்னா’, `ராணி’, `காத்தாடி’ உள்ளிட்ட படங்களிலும் தன்ஷிகா நடித்து வருகிறார்.