full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரத்னகுமாரின் புதிய படத்தில் தனுஷ்?

`வேலையில்லா பட்டதாரி-2′ படத்திற்கு பிறகு தனுஷ் அவரது முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகீர்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற பிப்ரவரியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரது நடிப்பில் தாமதமாகியிருக்கும் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதி படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இதுதவிர பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க இருக்கிறது. அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தாகி இருக்கிறார்.

இந்நிலையில், தனுஷ் அடுத்ததாக `மேயாத மான்’ இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் தனுஷின் வுண்டர்பார் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் `மேயாத மான்’ படத்தை, படக்குழுவினருடன் பார்த்த தனுஷ் படக்குழுவினரை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.