நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேசிய ரஜினி, “ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன். எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது. 23 ஆண்டுகள் மட்டும் தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன். 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து வருகிறேன். நான் ஒரு பச்சை தமிழன். இங்கே அரசியல் சிஸ்டம் சரியில்லை.” என்று கூறினார்.
ரஜினியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டைத் தமிழர்கள் தான் ஆளவேண்டும் என்று பல பிரபலங்கள் கருத்துத் தெரிவித்தனர். ரஜினியின் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
திரைஉலகைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களைக் கூறி வந்த நிலையில், ரஜினியின் மருமகன் தனுஷ் எந்த கருத்தையும் சொல்லாமல் இருந்தார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுசிடம் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு தனுஷ், “அரசியல் குறித்து மட்டுமல்ல, ரஜினி எது பற்றி முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்களால் எங்கள் குடும்பத்துக்கு எந்தவித அழுத்தமும் இல்லை.” என்றார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருடைய கட்சியில் உங்களுக்கு என்ன பதவி கிடைக்கும் என்று கேட்ட போது தனுஷ் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே சென்றார்.