full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

என்னை பல சமயங்களில் பாராட்டியவர் திரு.அண்ணாமலை – கே.ராஜன்

தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்)திரு.அண்ணாமலை அவர்களுக்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை “அபிராமி” ராமநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.

ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், “ரோகினி” திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் அவர்களுடன், கலைப்புலி.S.தாணு, “அபிராமி” ராமநாதன் அருள்பதி, அழகன், K.ராஜன், சக்தி பிலிம் பேக்ட்ரி B.சக்திவேலன், “திருச்சி” மீனாட்சி சுந்தரம், “ராக் போர்ட்” முருகானந்தம், “சேலம்” மனோகரன், ஈஸ்வரன் என திரைத்துறையை சேர்ந்த பலர் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்தனர்.

அவ்விழாவில் பேசிய பலரும் (லேட்)திரு.அண்ணாமலை அவர்களுடனான நட்பையும், நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டனர்.

“ரோகினி” திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் பேசியதாவது,

அண்ணாமலையின் மறைவு எங்கள் சங்கத்திற்கு மட்டுமல்லாமல், பல திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களின் வாழ்வில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அதை நிரப்ப யார் வருவார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.

அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கும் விதத்தில் இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். இங்கு வந்து சிறப்பு சேர்த்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி, என்றார்.

அதனைத் தொடர்ந்து (லேட்)திரு.அண்ணாமலை அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார் “அபிராமி” ராமநாதன்.

அப்போது பேசிய “அபிராமி” ராமநாதன்,

இந்த படத்திறப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் என் இனத்தவருக்கு வணக்கம். என் இனம் என்றால் திரையுலகம் தான். நாங்கள் பலரையும் மகிழ்வித்திருக்கோம். மேலும் பேசிய அவர், அண்ணாமலை எங்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் முன்பு, கண்ணாயிரம் என்பவர் தான் தலைவராக இருந்தார். அவரின் மறைவுக்கு பின், யாரை தலைவராக்குவது என்பது திரு.D.R அவர்களுக்கு குழப்பமாக இருந்தது.

அந்த சமயத்தில், கண்ணாயிரம் அவர்களின் பணி காலம் முடிய 9 மாதங்கள் உள்ளன. அந்த 9 மாதங்கள் மட்டும் நான் தலைவராக இருக்கட்டுமா? என்றார் அண்ணாமலை.

அப்போது, தலைவராக அதவியேற்ற அண்ணாமலையின் நிர்வாகத்தை கண்டு திரு.D.R அவர்கள் மீண்டும் அண்ணாமலையை தலைவராக்கினார். அந்த அளவிற்கு சிறப்பாக நிர்வாகம் செய்யக்கூடியவர் அண்ணாமலை.

மேலும், பாபா படத்தின் தோல்விக்கு ரஜினி நஷ்ட ஈடு கொடுத்தது தான் அனைவருக்கும் தெரியும். அது எப்படி வந்தது என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றார்.

அடுத்து பேசிய K.ராஜன்,

அண்ணன் அண்ணாமலையின் மறைவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னை பல சமயங்களில் அவர் பாராட்டியுள்ளார். உதாரணமாக, திருட்டு VCD களுக்கு எதிராக, பர்மா பஜாரில் நான் கடைகளை அடித்த போது. என்னை அவர் பாராட்டினார். மேலும், பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பலவற்றை பேசியுள்ளோம்.

அவரை போல் நிர்வாகம் செய்து, விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் பெற்றுத்தர “ரோகினி” பன்னீர் செல்வம் நினைத்தால் தான் முடியும்.

விரைவில், ஒரு குழுவாக நடிகர்களின் சம்பளம் குறித்தும். OTT பிரச்சனை குறித்தும் அனைவரும் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்றார்.

கலைப்புலி.S. தாணு பேசியதாவது,

என்னால் எப்படி, D.R அவர்களை மறக்க முடியாதோ, அதே போல் அண்ணாமலை அவர்களையும் மறக்க முடியாது. அண்ணாமலை அவர்களின் சிறப்பு என்னவென்றால், அதிகம் பேச மாட்டார். ஆனால், நினைத்த காரியத்தை கட்சிதமாக செய்து முடிப்பார். மிகவும் தன்மையான மனிதரும் கூட. அப்படி பட்ட இழப்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கும், திரையுலகிற்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு.

அவரின் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு, அவருக்கு சிறப்பு செய்தது எனக்கு நெகிழ்வான ஒரு நிகழ்வாகும். இவ்விழாவை ஏற்பாடு செய்து தந்த பன்னீர் செல்வம் சாருக்கும், கஜேந்திரனுக்கும், ஸ்ரீதருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.