இளைஞர்கள் என்றாலே ஏதாவது ஒரு துறையில் கால் பதித்து வெற்றியடைய வேண்டும் என்ற ஆசைகளும், கனவுகளும் இருக்கும். அதிலும், சினிமாத் துறை என்றால் கேட்கவே வேண்டாம், ஆசைகளும், கனவுகளும் நிறையவே இருக்கும். இருப்பினும், அதில் சிலர் தான் வெற்றிபெற்று நட்சத்திரமாக ஜொலிப்பார்கள். அதில், அமெரிக்காவில் உள்ள கேன்ஸஸ் நகரத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த குறும்படத்திற்கான விருதை அபிலேஷ் இயக்கிய ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படம் பெற்றிருக்கிறது. அபிலாஷ் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சி.எஸ். படித்தவர். இருப்பினும், அவருக்கு சினிமா மீதுள்ள விருப்பத்தால் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார். குறும்படம் இயக்கியதைப் பற்றியும், விருது வென்றதைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொண்டதாவது
எனது சொந்த ஊர் நெய்வேலி. படிப்பதற்காக சென்னை வந்தேன். படித்துக் கொண்டிருக்கும்போதே ஃபேஷன் புகைப்படக்காரராக இருந்தேன். அதன்பிறகு ‘புலி’ படத்தில் மேக்கிங்கில் பணியாற்றினேன். பிறகு ‘மெர்சல்’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். ஒருநாள் இப்படத்தின் ஒரு வரி மனதில் தோன்றியது. ஆனால், அந்த கதைக்கு என் அறை நண்பர் அசோக் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஏனென்றால், கல்லூரியில் படிக்கும்போதே நிறைய கவிதைகள் எழுதியதைப் படித்திருக்கிறேன். ஆகையால், அவரிடம் கதையைக் கூறி இப்படத்திற்கு நீ தான் எழுத வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார். இப்படத்தின் இறுதி 10 நிமிட காட்சிகளில் அவருடைய வசனங்கள் அனைவராலும் பேசப்படும்.
ஏனென்றால், இப்படம் ஆக்ஷனை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, ஆக்ஷனை வைத்து சரியான விஷயங்களைக் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினம். அதற்கு அசோக்கின் எழுத்து பக்க பலமாக இருந்தது.
இப்படம் மொத்தமாக 48 மணி நேரத்திலேயே படப்பிடிப்பை முடித்து விட்டோம். குறைந்த நேரத்தில் இப்படம் எடுக்க சவாலாக இருந்தது நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பு தான். ஆனால், அவர்கள் எந்த தயக்கமும் காட்டாமல் குறித்த நேரத்தில் படத்தை முடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இப்படத்தில் கதாநாயனும் கிடையாது, வில்லனும் கிடையாது. புதிய கோணத்தில் இப்படம் அமைந்திருக்கும்.
விருது வெல்ல வேண்டும் என்ற நோக்கில் படமியக்கவில்லை. ஆனால், சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவிற்கு அதுவும் தமிழ் படத்திற்கு விருது கிடைத்துள்ளது என்ற செய்தி கேட்டவுடன் அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன். எனது பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். விருது வழங்கும் சமயத்தில் என்னால் அமெரிக்கா செல்ல இயலாததால் எனது அம்மா தான் பெற்றுக் கொண்டார்.
அடுத்து வெள்ளித்திரையில் இயக்கப் போகிறேன். அதற்கான கதை 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. விரைவில் படப்பிடிப்பைத் துவங்குவோம்.
இவ்வாறு இயக்குநர் அபிலேஷ் தன் திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சர்வதேச திரைப்பட விழாவில் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த குறும்படமாக ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ விருது பெற்றுள்ளது. அந்த படத்திற்கு வசனம் எழுதிய அசோக் தன் அனுபவத்தைக் கூறியதாவது
கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி தான் எனது சொந்த ஊர். சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படித்தேன். நானும் அபிலாஷும் கல்லூரியில் படிக்கும்போது ஒரே அறையில் தங்கியிருந்தோம். சிறுவயதில் சினிமா பார்ப்பதோடு சரி. மற்றபடி சினிமாவில் வரவேண்டும் என்ற எந்த ஆசையும் இல்லை. அபிலேஷ் மூலம் தான் எனக்கு சினிமா ஆசை வந்தது.
அபிலாஷ் கதை கூறி இப்படத்திற்கு நீ தான் வசனம் எழுத வேண்டும் என்று கூறியதும் என்னால் முடியுமா என்று முதலில் தயங்கினேன். ஆனால், அபிலேஷ் என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். நான் எழுதிய பின் அதைப் பார்த்து முதலில் விமர்சனம் செய்தது அபிலேஷ் தான். நிச்சயம் வசனம் எல்லோராலும் பேசப்படும் என்று கூறினார். நாம் வெளியிலிருந்து என்னதான் நல்ல விமர்சனங்களை வாங்கினாலும், எழுதும்போதே இயக்குநரிடம் இருந்து வருவது தான் சிறந்ததாக இருக்கும்.
சிறுவயது முதலே தமிழில் எனக்கு ஆர்வம் அதிகம். மற்ற பாடங்களைவிட தமிழில் தான் அதிக மதிப்பெண் வாங்குவேன். அதற்கு காரணம் என்னுடைய அப்பா தான். நான் ஒரு சந்தேகம் கேட்டால் அதுபற்றி சுமார் அரைமணி நேரமாவது அந்த விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசுவார். அவர் கூறிய விஷயங்கள் என்னுடைய ஆழ்மனதில் பதிந்த விஷயங்கள் இன்று எழுத்தாக உருமாறியிருக்கிறது. அதேபோல், எழுதுவதற்கு பக்குவம் அவசியம். அது இருந்தால் நன்றாக எழுத முடியும்.
நான் சினிமா துறையில் கால் பதிக்கப் போகிறேன் என்றதும் அப்பாவுக்கு விருப்பமில்லை. ஆனால், அம்மாவுக்கு என் மேல் உள்ள நம்பிக்கையில் மறைமுக ஆதரவு கொடுத்தார். அதன்பிறகு கதையை அவர்களிடம் கொடுத்தேன். படித்ததும் அவர்களுக்கும் என் மேல் நம்பிக்கை வந்தது.
104 நாடுகளிலிருந்து 1400 குறும்படங்கள் பங்குபெற்றன. அதில் என் நண்பர் அபிலேஷ் இயக்க, நான் எழுதிய ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படம் சிறந்த குறும்படத்திற்கான விருதினை வென்றது. இதையறிந்ததும், எங்கள் இருவரது பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள்.
இனி என்னுடைய பயணம் சினிமா மட்டும் தான். வெள்ளித்திரையில் வெற்றியடைவதுதான் என்னுடைய லட்சியம்.
இவ்வாறு ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ குறும்படத்திற்கு வசனம் எழுதிய அசோக் கூறினார்.
’48 பிரேம்ஸ்’ நிறுவனம் சார்பில் பீனா சந்திரகலா, ரவி மாதவன் அங்கமுத்து ஆகியோர் இக்குறும்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.