உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை

General News News
0
(0)

தமிழக அரசு பணி இட ஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கவும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மற்றும்
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை
*மாண்புமிகு தமிழக முதல்வர்,*

அவர்கள் மற்றும்

*மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்*, அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை,

ஆகியோரது கனிவான கவனத்திற்கு..

*பொருள்: ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டு உட்பிரிவில் சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் கோரி..*

வணக்கம்,

திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக,
“கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு..
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்
புல்லாளே ஆய மகள்..”

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், இன்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

”தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்.

நன்றி.!
அன்புடன்,

அமீர்
சென்னை
17.01.2024

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.