தன்னுடைய நடிப்பால் உலக ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது நடிப்பைப் பாராட்டாதவர் எவரும் இல்லை என்றே சொல்லலாம். மேலும் இவரது நடிப்புக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. இதுவரை சிவாஜி கணேசன் தமிழில் மட்டும் 277 படங்கள் நடித்துள்ளார். 1999ம் ஆண்டு வெளியான ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்ற படமே இவரது கடைசிப் திரைப்படமாகும்.
2001ம் ஆண்டு ஜூலை மாதம் சிவாஜி கணேசன் உயிரிழந்தார். அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கி, தற்போது அதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. சிவாஜி கணேசனின் 16-ம் ஆண்டு நினைவுதினம் வருகிற 21-ந் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், சிவாஜி கணேசனுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இயக்குனர் சேரன் ‘செவாலியர் சிவாஜி சாங்’ என்ற பாடல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த பாடல் சிவாஜி கணேசனின் நினைவு நாளான ஜூலை 21ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில், ‘உலகின் மிகச்சிறந்த கலைஞன் நடிகர் திலகம். அவரின் நினைவு நாளன்று இந்த தலைமுறைக்கு நினைவு கூற ஒரு பாடல். காத்திருக்கவும் ஜூலை 21ம் தேதி. முற்றிலும் புதிய பாடல், புதிய காட்சித் தொகுப்பு… பிரம்மிக்கப்போவது உறுதி…’ என்று பதிவிட்டுள்ளார்.