சென்ற ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் அரியலூர் மாணவி அனிதா. அதன் பிறகு தான் தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இருந்தாலும் தமிழக அரசின் மெத்தனப் போக்கால் இந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்திருக்கிறது.
இதில் வேதனை என்னவென்றால், தமிழக மாணவர்கள் பலரும் வேறு மாநிலங்களில் தேர்வு மையம் தரப்பட்டதால் கடைசி நேரத்தில் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். கேரளாவிற்கு தன் மகனை தேர்வெழுத அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் மரணமடைந்த துயர சம்பவமும் நடந்தேறியது.
இப்போது நீட் தேர்வு தமிழகத்திற்கு மூன்றாவது மூன்றாவது மரணத்தை பரிசளித்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் பேராவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா என்னும் மாணவி +2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
வழக்கம் போல ஒரு சிலர் மட்டுமே இதற்காக குரல் கொடுத்து வருகிறார்கள். சினிமாவிலிருந்து,
“நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது. கல்வி உரிமை மறுப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள்.வழக்கம்போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள்.யாரிடம் நம்உரிமையை கேட்க்கிறோம் என்று உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்..அடுத்த படுகொலைகள் நோக்கி!” என இயக்குநர் பா.ரஞ்சித்தும்..
“தகுதி பெறுவதற்கான முறையான பயிற்சி அளித்த பின் போட்டிக்கு அழைத்திருக்க வேண்டும். எனது தங்கைகள் அனிதாவும், ப்ரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர். பல கனவுகளோடு படித்த எம் மாணவர்களின் உயிர்வலி உணர மறுப்பதும் குற்றமே!” என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.