full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

அம்பேத்கரின் தேரை முன்னோக்கி இழுத்துச் செல்வேன் – இயக்குநர் பா.ரஞ்சித் உருக்கமான பேச்சு!

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே.,கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்…

“ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனிதசமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் ஒரு விசயத்தை வேதனையோடு சொன்னார். நான்கஷ்டப்பட்டு ஒருதேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். தயவுசெய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள் என்று சொன்னார்.

நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச்செல்வேன். அதற்கான ஆரம்பம் தான் இந்தப் “பரியேறும் பெருமாள்” படம். எனக்கிருக்கிற வாய்ப்புகளில் தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை முரணை உடைக்கிற வேலையைசெய்வேன். இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் படம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில்முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும், மாரி செல்வராஜையும் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அப்பா – மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம்சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியானது.

என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்குண்டு. அந்த எண்ணம்தான் இப்போதும் என்னை இயக்குகிறது. சில நேரங்களில் குடும்பம், பொருளாதாரம் குறித்த யோசனை எழுந்தாலும், நம்மைச்சுற்றி இருப்பவர்கள் நமக்கு அளிக்கும் ஆதரவு தான் நம்மை இயங்க வைக்கிறது. நான் போகும் பாதை சரியா என நான் யோசிக்கும் போதெல்லாம், என் மனைவி அனிதா தான் எனக்கு ஊக்கமளிப்பார். நாம் எங்கிருந்து வந்தோம் என்று நமக்குத் தெரியும். இப்போதிருப்பது இல்லாமல்போனாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நீ செய்யும் வேலையை நிறுத்தாதே, என தைரியம் கொடுப்பார். அவர் கொடுத்த தைரியம் தான் இந்த பரியேறும் பெருமாள் திரைப்படம். கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ் என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது.

யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாகசெய்யும். அந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசை படத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் எனக்கு பிடித்த, நான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது” என்று உணர்ச்சிகரமாக பேசினார்.