தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதிலும், படத்தை எல்லா மட்டத்திற்கும் கொண்டு சேர்ப்பதிலும் விமர்சகர்களுக்கும் ஒரு பங்குண்டு. அதுவும் படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகனுக்கு படத்தைப் பற்றிய நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் கொண்டு சேர்க்கப்பட்டு விடுகிறது இப்போதெல்லாம்.
இதனாலேயே பல இயக்குனர்களுக்கு விமர்சகர்களின் மீது மனக்கசப்பு ஏற்படுவதுமுண்டு. எதார்த்தம் இதுவாக இருக்க, கடந்த வாரம் வெளியான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால்” படத்திற்கு வந்துகொண்டுள்ள எதிர்மறை விமர்சனங்களை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
விமர்சகளின் கருத்திற்கு மதிப்பளித்து படத்தை மறுபரிசீலனை செய்து, படத்தின் வேகத்தைக் குறைப்பதாகக் கூறப்பட்ட காட்சிகளை நீக்குவதாக இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிலும், நாயகி மெஹரின் சம்பந்தப்பட்ட முழு காட்சிகளும் படத்தில் நீக்கப்பட்டுள்ளது. இதற்காக நாயகியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் சுசீந்திரன்.
மொத்தமாக படத்திலிருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு, 1 மணி 50 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த வெர்ஷன் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று இயக்குனர் சுசீந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.