full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இயக்குநராக நான் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை – இயக்குநர் சுசீந்திரன்

‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் தான் நடித்த அனுபவத்தைப் பற்றி இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது :-

‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் மிஷ்கின் எனது பெயரைக் கூறியிருக்கிறார். உடனே விக்ராந்த் என்னைத் தொடர்பு கொண்டு என்னை நடிக்க அழைத்தார். இயக்குநர் என் கதாபாத்திரத்தைக் கூறியதும் வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. இருப்பினும், இயக்குநர் சொல்வதை செய்ய வேண்டுமென்ற மனநிலையோடு சென்றதால் நடித்து முடித்தேன்.

முதல் பாதி படம் பார்த்த என் குடும்பத்தார்கள் நடிப்பதில் நான் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டேனோ என்று நினைத்தார்கள். ஆனால், இரண்டாவது பாதி பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்தார்கள்.

எனக்கோ, எதுவொன்றைச் செய்தாலும் அதில் உச்சத்திற்கு சென்ற பின்பு தான் அடுத்த வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அப்படி பார்த்தால் இயக்குநராக நான் இன்னும் உச்சம் தொடவில்லை. அதன்பின் தான் நடிப்பில் கவனம் செலுத்துவேன். அதற்கிடையில், இதுபோல் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அது 10 நிமிட பாத்திரமாக இருந்தாலும் கூட.

‘கென்னடி கிளப்’,  ‘ஏஞ்சலினா’ இரண்டில் எந்த படம் முதலில் வெளியாகும் என்று தெரியவில்லை. அதற்கு பின் ‘சாம்பியன்’ வெளியாகும். ‘ஏஞ்சலினா’ இக்கால இளைஞர்களுக்கான த்ரில்லர் படமாக இருக்கும். இந்த தலைமுறையினரிடம் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். குறிப்பாக பெண்கள் பயத்துடன் இருப்பதால் தான் தோல்வியடைகிறார்கள். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உலகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறேன். இதில் பொள்ளாச்சி சம்பவமும் இடம்பெறும்.

இரண்டாவது பாகம் எடுப்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு கிடையாது. ஏனென்றால், முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது பாகம் எழுதுவதால் அதே சாயலில் வரவேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு எழுதும்போது அது சரியாக அமைவதில்லை. எழுதும் போதே இரண்டு பாகத்தையும் எழுதினால் தான் வெற்றிபெறும். அப்படி எழுதி வெற்றியடைந்த படம் தான் ‘பாகுபலி’.

‘வில் அம்பு’ படத்தின் இயக்குநர் என் நண்பர் என்பதால் அப்படத்தைத் தயாரித்தேன். மற்றபடி தயாரிக்கும் எண்ணமில்லை.

இவ்வாறு இயக்குநர் சுசீந்திரன் கூறினார்.

இவ்வேளையில், பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் தன்னை நடிகராக களமிறக்கிய இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா வுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்து நன்றியை தெரிவித்தார், இயக்குநர் சுசீந்திரன்.