full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

உதவி இயக்குநர்களின் வாழ்க்கையில் வளம் சேர்க்கும் கோரிக்கைகள் : விக்ரமன்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், துணைத் தலைவர் கே.எஸ்.ரவிக்குமார், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி உள்பட சங்கத்தினர் பலர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள்.

அதைத் தொடர்ந்து அவர்களை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம் உள்பட சங்கத்தினர் சந்தித்துப் பேசினர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த விக்ரமன், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரிடம் 4 முக்கிய கோரிக்கைகளை அளித்துள்ளோம். அதில், சினிமா உதவி இயக்குனர்களின் வாழ்க்கையில் வளம் சேர்க்கக் கூடிய 3 கோரிக்கைகள் உள்ளன.

சிறந்த படங்களை மத்திய அரசு தேர்வு செய்யும்போது, தயாரிப்பாளர்களுக்கு சான்றிதழ், பரிசுத் தொகை, கேடயம் ஆகிய மூன்றையும் வழங்குகிறது. அதுபோல தமிழக அரசும் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருக்கும் சிறந்த படத்தேர்வின் போது இந்த மூன்றையும் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.

சென்னை உள்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்தினால் கூட போலீசார் வந்து கெடுபிடி செய்கின்றனர். எனவே இதை நீக்கி, மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படும் இடம்தவிர, மற்ற இடங்களில் சுதந்திரமாக படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

இந்த கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதி தெரிவித்தார்.” என்றார்.

ஆர்.கே.செல்வமணி பேசிய போது, “எங்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே 65 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. ஆனால் அதில் வீடுகள் கட்டுவதற்கான முன்னெடுப்புப் பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது. ஓ.எம்.ஆர். சாலையுடன் இணைப்பதற்கு அரசின் உதவி தேவைப்படுகிறது. அதைக் கோரியுள்ளோம். எங்களுக்கு மருத்துவமனை கட்டுவதற்கும் சென்னையில் இடம் கேட்டுள்ளோம்.

வல்லமை படைத்த சிலர் மட்டும் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்கு அரசின் தலையீடு அவசியம். எனவே தமிழ்நாடு பிலிம் டெவலப்மெண்ட் கார்பரேஷன் என்ற கழகத்தை அமைத்து அதற்கு தலைவராக அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ஏதோ ஒரு வகையில் அரசு தலையிட வேண்டும். இதனால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை சினிமா துறையில் யாரும் செலுத்த முடியாது. காலம் கடந்துவிட்டால் கோரிக்கைகள் நடைமுறைக்கு வராமல் போய்விடும்.” என்று குறிப்பிட்டார்.