பெப்சி சிவா வெளியிட்டுள்ள ” கள்ளக்காதல் ” குறும்படம் தற்போது இணையத்தை கலக்கிவருகிறது
“கள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை” என்ற செய்திகள் எல்லாம் தற்போது மிகச்சாதரணமாக நம்மைக் கடந்து செல்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியான மனநிலைக்கு இச்சமூகத்தின் கலாச்சார மீறல் நம்மை தள்ளிவிட்டது.
அது ஆபத்தானது என்பதை அறிவுறுத்த வந்திருக்கும் ஒரு நேர்த்தியான குறும்படம் தான் “ஆர்டிகள் 497 கள்ளக்காதல்”
நெக்ஸ்ட் லெவல் புரொடக்சன் தயாரித்துள்ள இப்படத்தை சிலம்புச் செல்வன் எழுதி இயக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் மிகச்சிறப்பாக உருவாகியுள்ள தமிழரசன் படத்தைத் தயாரித்துள்ள பெப்சி சிவா தனது tamizh media yutube சேனலில் இக்குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.
இளைய தலைமுறையில் சமுதாய சிந்தனையுள்ள படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக தயாரிப்பாளர் பெப்சி சிவா இப்படியான குறும்படங்களை வெளியிடுகிறார். இது நிச்சயமாக வளரும் இளம் படைப்பாளிகளுக்கு பெரும் உந்துதலாக இருக்கும்
ஒரு போலீஸ் விசாரணையோடு துவங்கும் படம் பல்வேறு திருப்பங்களோடு பயணிக்கிறது. கள்ளக்காதலில் ஆண்/பெண் இருபாலருமே தவறுகள் செய்வதை சுட்டிக்காட்டும் இக்குறும்படம் பெண்களுக்கான பாதிப்பு அதிகம் என்பது போலவே ஆண்களுக்கான பாதிப்பும் அதிகம் என்பதைப் பேசுகிறது. பெண்களுக்கு அதிக சலுகைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெண்களுக்கு பொறுப்பும் மிக அவசியம் என்பதை படம் பேசியுள்ளது. படத்தில் வயதான பின் திருமணம் ஆகி மனைவியின் பழைய காதலனால் ஏற்படும் இயலாமையைச் சுமக்கும் பாத்திரத்தில் நாயகன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவர் படத்தின் இறுதியில் தனக்குள் இருக்கும் மனிதத்தன்மையை வெளிப்படுத்தும் போது கவர்கிறார். படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசை எல்லாம் குறும்படம் என்பதைத் தாண்டி ஒரு பெரும்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.
வசனங்களிலும் காட்சியமைப்பிலும் நன்றாக கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் சிலம்புச் செல்வன். நேற்று யூட்யூபில் வெளியான இக்குறும்படம் 20 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து பாசிட்டிவான பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சரியான நேரத்தில் வெளியாகியுள்ள தரமான படம் இது.
மேலும் இந்த “ஆர்ட்டிகள் 497 கள்ளக்காதல்” என்ற குறும்படம் பேசும் அறம் சார்ந்த விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்திற்கு நிகராக இப்படத்திற்கான விளம்பரங்களைச் செய்துள்ளார் பெப்சி சிவா. பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையான போஸ்டர் டிசைனிங், பெரிய பத்திரிகைகளில் விளம்பரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட நிறைய மாவட்டங்களில் படத்தின் போஸ்டர்கள் என இக்குறும்படத்தைப் பெரிதாக ரீச் செய்துள்ளார் பெப்சி சிவா