அரபு நாடுகளுக்கு சென்று திரும்பவர்களுக்கு, அரபு தாக்கு என்ற சொல் பல்வேறு கோணங்களில் பரிச்சயமாகியிருக்கும். அதையே, தான் இயக்கவிருக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார் இயக்குனர் பிரான்ஸிஸ். அப்படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் கூறியதாவது, “துபாயை கதைகளமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படம் இது. துபாயில் தமிழ் மீது அளவற்ற பற்றுக்கொண்டிருக்கும் ஒரு அரபுப் பெண்ணை பார்த்து பிரமித்துப்போன நாயகன், அவளின் ஆசையை நிறைவேற்ற என்ன செய்கிறான்…? அரபு நாட்டுப் பெண்களை கண்கொண்டு பார்ப்பதற்கே கடுமையான தண்டணைகள் நடைமுறையில் இருக்க, அவை எதற்கும் கட்டுப்படாமல் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு அப்பெண்ணின் ஆசைகளை நிறைவேற்ற நாயகன் எப்படி போராடுகிறான்? இறுதியில் அவளது ஆசையை நிறைவேற்றினானா இல்லையா என்பதே கதையின் மையக்கரு. தமிழர்களேயில்லாத ஊரில் தமிழ் மட்டுமே தெரிந்த நாயகனின் அமரகாவியம் தான் இந்த அரபு தாக்கு என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
இத்துடன், வேலைத் தேடி துபாய்க்கு செல்பவர்கள், அங்கு படும் துயரங்களையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படி சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் அழகாக சொல்லவிருக்கிறோம்.” என்றார்.
மேலும் அவர், “அதிதி படத்தில் அறிமுகமான நிகேஷ் ராம் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். தமிழில் முதன்முதலாக பெர்குஸார் கொரல் (Berguzar Korel) என்ற அரபு நடிகை ஒருவரை கதையின் நாயகியாக அறிமுகப்படுத்துகிறோம். படத்தில் தம்பி ராமையா வித்தியாசமான காமெடி கேரக்டரிலும், ரவிமரியா ஒரு முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார்கள். படத்தை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கவிருக்கிறோம்.
துபாயின் நவீன அடையாளமான புர்ஜ் கலிபாவை வித்தியாசமான கோணத்திலும், உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடங்கள் மிகுந்து காணப்படும் துபாய் ஷேக் சாயீத் சாலையிலும் முக்கியமான காட்சிகளை படமாக்கவிருக்கிறோம். துபாயில் மட்டுமில்லாமல் ஷார்ஜா, அபுதாபி என ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள அனைத்து பகுதிகளிலும் காட்சிகளை படமாக்கவிருக்கிறோம். ஒரு சில காட்சிகளை தமிழ்நாட்டிலும் படமாக்க எண்ணியிருக்கிறோம்.
யாரும் ஊகிக்காத வகையில் படத்தின் கிளைமாக்ஸ் இருக்கும். காமெடி, ஆக்சன், லவ், சென்டிமெண்ட் என அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் டோட்டல் பேமிலி எண்டர்டெயினராக இப்படம் தயாராகவிருக்கிறது.” என்று கூறினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் நடைபெறவிருக்கிறது.