full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சிவகார்த்திகேயன் நடிக்கும் ’டாக்டர்’ படப்பூஜை இன்று துவங்கியது

 

தன் படங்களின் வசூலின் மூலம் நட்சத்திர நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தயாரித்து அதன் மூலம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் முன்னிலை பெற்று வருகிறது. இந்த இருவரும் ‘ஹீரோ’ படத்தில் இணைந்தனர். ‘ஹீரோ’ வெற்றிக்காக காத்திருக்கும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது வெற்றியை உறுதியாக்கியுள்ளது.

‘கோலமாவு கோகிலா’ மூலம் அனைவரையும் கவர்ந்த இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதன் படப்பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. ’டாக்டர்’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தில் ‘கேங்க் லீடர்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பிரியங்கா நாயகியாக நடிக்கிறார். ‘டாக்டர்’ மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களைக் கவரவுள்ளார். இதில் வினய், யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா, ’கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்க, விஜய கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். கலை அரசு இணை தயாரிப்பாளராகவும், டி.ஏழுமலையான் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் கேட்ட போது, ” ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்துமே அடங்கியது தான் கதை. இந்த ஜானர் என்று அடக்கிவிட முடியாது. ‘டாக்டர்’ என்று தலைப்பிட்டுள்ளோம். இதில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளனர். சென்னை மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். விஜய் டிவியில் பணிபுரியும் போதிலிருந்தே சிவகார்த்திகேயனைத் தெரியும். அப்போதிலிருந்து சுமார் 12 ஆண்டுகளாக எங்களது நட்பு தொடர்கிறது. எதிர்காலத்தில் ஒரு படம் பண்ணனும் என்று பேசுவோம். ‘கோலமாவு கோகிலா’ படத்துக்குப் பிறகு அவருக்கு தகுந்த மாதிரியான கதையும் அமைந்தது. சொன்னேன்.. உடனே ஒ.கே சொல்லிட்டார்… தொடங்கிட்டோம்” என்று தெரிவித்தார்.
இந்தப் படத்தின் பூஜையில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் கே.ஜே.ராஜேஷ், சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், யோகி பாபு, வினய், நாயகி பிரியங்கா, இணை தயாரிப்பாளர் கலை அரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

அடுத்தாண்டு பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகியிருக்கும் ’டாக்டர்’ படத்தின் பயணம் இன்று முதல் தொடங்குகிறது.