full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இரட்டை வேடம் போடக் கூடாது : வாராகி

சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்தது.

அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, சண்டைதான் இந்தப் படத்தின் கதை. ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது என்கிறார் வாராகி.

இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. படப்பிடிப்பில் செய்தியாளர்களை வாராகி மற்றும் நாயகிகள் ஷிவானி குரோவர், ஜிஸ்மி ஆகியோர் சந்தித்தனர்.

வாராகி கூறுகையில், “இது ஒரு அரசியல் படம். ஆனால் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். மக்களை ஆளும் அரசியல்வாதிகள் எப்படி இருக்கக் கூடாது, இரட்டை வேடதாரிகளாக நாடகமாகக் கூடாது என்று சொல்ல எடுத்துள்ள படம். நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றிப் பெறும்.” என்றார்.

நாயகி ஷிவானி குரோவர் கூறுகையில், “நான் ஏற்கெனவே தமிழில் நடித்திருந்தாலும், சிவா மனசில புஷ்பா எனக்கு முக்கியமான படம். என் பாத்திரம் என்னவென்று விளக்கமாக சொல்லித்தான் ஒப்பந்தம் செய்தார்கள். இந்த வேடத்தில் நடிப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் வராது. எனது இயக்குநர் – ஹீரோ வாராகி அதைப் பார்த்துக் கொள்வார். அந்த அளவு துணிச்சலான மனிதர் அவர். மிகச் சிறப்பாகவும் நடித்துள்ளார்.” என்றார்.

நாயகி ஜிஸ்மி கூறுகையில், “மலையாளத்தில் சிறுவயதிலிருந்தே படங்களில் நடித்துள்ளேன். தமிழில் எனக்கு இது முதல் படம். எனக்கு மிகப்பெரிய அறிமுகத்தைத் தந்துள்ளார் வாராகி. அவருக்கு மனைவியாக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நடிப்பதைக் கேள்விப்பட்டு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. நான் இந்தப் படம் வெளியாகும்வரை வேறு படத்தில் நடிப்பதாக இல்லை. அந்த அளவு நம்பிக்கை உள்ளது எனக்கு.” என்றார்.

சிவா மனசில புஷ்பா படத்தில் கே ராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தவசி ராஜ், விஜயகுமார், நியூஸ் 7 சுப்பையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – குவேரா, எடிட்டிங் – சதீஷ்குமார், இசை – அருணகிரி, பாடல்கள் – காதல் மதி, அஸ்மின், நடனம் – மஸ்தான், ராபர்ட், இணைத் தயாரிப்பு – சுஜிதா செல்வராஜ், மக்கள் தொடர்பு – எஸ் ஷங்கர்