நயன்தாராவும், அவரது தந்தை தம்பி ராமையாவும் சொந்தமாக கால்டாக்சி நிறுவனம் தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். இதற்காக பழைய காரை வாங்க சென்ற இடத்தில், ஒரு பழங்காலத்து கார் ஒன்று தென்படவே, நயன்தாரா அதை வைத்து புதுமையான முறையில் விளம்பரம் செய்து சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார்.
அந்த காரை வைத்துக்கொண்டு சிறியதாக கால் டாக்சி நிறுவனம் தொடங்குகிறார் நயன்தாரா. அந்த காரில் வாடிக்கையாளர் ஒருவர் கொடைக்கானலுக்கு செல்லுகிறார். அப்போது, நயன்தாரா தனது காருக்கு ஒரு டிரைவரை போட்டு கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கிறார்.
செல்லும் வழியில், ஒரு நபரை பார்த்தவுடன், அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தானாகவே சென்று அந்த நபரை துரத்துகிறது. ஆனால், அந்த நபரை பிடிக்கமுடியாமல் போனவுடன் அங்கேயே நின்றுவிடுகிறது. காரில் பயணம் செய்த அனைவரும் பதட்டத்தில், காரில் இருந்து இறங்கி ஓடிவிடுகிறார்கள்.
இது நயன்தாராவுக்கு தெரியவே, தனது காரை மீட்பதற்காக கொடைக்கானல் போகிறார். கொடைக்கானலில் இருந்து தனது காரை ஊருக்கு எடுத்து வரும்போது, அதே நபர் மறுபடியும் குறுக்கிட, மீண்டும் நயன்தாராவின் கார் கட்டுப்பாட்டை இழந்து அந்த நபரை துரத்தி கொலை செய்து விடுகிறது.
அந்த காரினால் நயன்தாராவிற்கு பல பிரச்சனைகள் வருகிறது? இதிலிருந்து நயன்தாரா எப்படி மீள்கிறார்? அந்த காரின் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
வெற்றி படங்களில் நடித்து வரும் நயன்தாராவுக்கு இப்படமும் நல்ல வெற்றிப்படமாக அமைந்துள்ளது. முதல் பாதியில் காமெடியாகவும், பிற்பாதியில், பதட்டம், பயம் என சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா உடனான காட்சிகளில் கலகலப்பான மகளாக வரும் நயன்தாரா, திகில் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
தம்பி ராமையா தனக்கே உரித்தான ஸ்டைலில் காமெடியில் கலக்கி இருக்கிறார். முதல் பாதி முழுவதும் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். தந்தை-மகள் பாசத்திலும் கலக்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஹரிஷ் உத்தமனின் நடிப்பும் பிரமாதம். பிளாஸ்பேக்கில் வரும் சிறுமியின் நடிப்பும் சிறப்பு.
காமெடி கலந்த திகில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் தாஸ் ராமசாமி. முதல் பாதி காமெடி. பிற்பாதியில், திகில் கொடுத்து நம்மை பயமுறுத்திருக்கிறார். திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுத்தமைக்கு பாராட்டுக்கள். காரை வைத்துக் கொண்டு ஒரு புதுமையான கதையை சொல்ல முயற்சி செய்திருக்கிறார். அவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.
பிளாஸ்பேக்கில் வரும் பாடல் பார்க்கவும், கேட்கவும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையை பொறுத்தவரை விவேக் மெர்வின் மிரட்டியிருக்கிறார். காருக்கென்று தனியாக இவர் கொடுத்துள்ள தீம் மியூசிக் ரசிக்க வைக்கிறது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, திரையில் பிரமாண்டம் காட்டுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் நடக்கும் காட்சிகளை அவரது கேமரா கண்கள் அழகாக படம்பிடித்திருக்கிறது.
சினிமாவின் பார்வையில் ‘டோரா’ மிரட்டல்.