full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் மூலம் ஹரீஸ் கல்யாண்-சஞ்சய் பாரதிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்!

எதிர்வரும் வெள்ளிக் கிழமை வெளியாகும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் மூலம் அப்படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யாணுக்கும் இயக்குநர் சஞ்சய் பாரதிக்கும் ஜாக்பாட் அடித்திருக்கிறது. ஆம்… முதல் படம் வெளிவருவதற்கு முன்பே இந்த ஜோடிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்து விட்டது.  கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் தயாரிக்கும் அடுத்த படத்தில் இவ்விருவரும் மீண்டும் இணைகின்றனர். தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயனே அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கும் இந்த அறிவிப்பில் சில சுவையான அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இது குறித்து டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் தெரிவித்ததாவது….

“கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்டி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரிக்கும் படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்க, சஞ்சய் பாரதி இயக்குகிறார். இது தெய்வீகமான, ஆக்ஷன் கலந்த அதிரடித் திரைப்படமாகும். ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டிரைலரால் நான் வெகுவாக கவரப்பட்டேன். படவுலகில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் நான், ரசிகர்களின் நாடித் துடிப்பை துல்லியமாகக் கணிக்கும் இயக்குநர்கள் மிகச் சிலரைத் தான் பார்த்திருக்கிறேன். அத்தகைய சிலரில் ஒருவர்தான் இயக்குநர் சஞ்சய் பாரதி. இத்தகைய பண்புக்கூறு மிகுந்தவராக இருப்பதால் சஞ்சய் பாரதியின் முன்னேற்றம் ஜெட் வேகத்தில் இருக்கும் என்பது திண்ணம்.

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டீஸருக்கும் டிரைலருக்கும் இளைய தலைமுறையிடம் கிடைத்திருக்கும் தனித்துவம் மிக்க வரவேற்புபைப் பார்த்த நான் வாழ்த்து தெரிவிக்க சஞ்சய் பாரதிக்கு போன் செய்தேன். சாதாரணமாகத் தொடங்கிய எங்கள் உரையாடல் மேலும் தொடர்ந்துபோது, ஒரு கதைக் கருவையும் ஒரு பிரதான பாத்திரத்தையும் என்னிடம் பேச்சு வாக்கில் தெரிவித்தார். உடனடியாக என்னை அது மிகவும் கவரவே, ஹரீஸ் கல்யாணைத் தவிர வேறு யாரையும் இந்த வேடத்துக்கு நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். சஞ்சய் பாரதியும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவே, நாங்களே இணைந்து இந்தப் படத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டின்  மத்தியில் துவக்கப்பட இருக்கும் இந்தப் படத்தின் பெயர் மற்றும் நட்சத்திரங்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களுடன் படத்தின் வெளியீட்டு தேதியும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் கிரியேடிவ் என்டர்டெயிண்மெண்ட் சார்பில் தற்போது சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படத்தைத் தயாரித்து வருகிறார். இது தவிர, இவரே இயக்கவிருக்கும் படத்தைப் பற்றியும் அதில் நடிக்கும் நடிக நடிகையர் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாக இருக்கிறது.