full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

மலேசியாவில் பரவசமான தேவி ஸ்ரீபிரசாத்

விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தார்.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திர கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்து திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்து கேட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த போது, அவர்கள் தங்களுடைய மத்தியில் என்னை அமரவைத்துக் கொண்டனர். புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பும் கிடைத்தது. இது என்னுடைய வாழ்நாளில் இது வரை கிடைக்காத சந்தோஷம். அது கிடைத்தபோது பரவசமானேன். இந்த இரண்டு பேருடைய பாராட்டும் ஒரே நேரத்தில் கிடைத்தது வாழ்க்கையில் மறக்க முடியாத விசயமாகிவிட்டது’ என்றார்.

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டில் தெலுங்கில் கைதி நம்பர் 150, நேனு லோக்கல், ராரண்டோய் வேடுக சூதம், துவ்வாட ஜெகந்நாதம், ஜெய ஜானகி நாயகா, ஜெய் லவ குசா, உந்நாதி ஒகட்ட ஜிந்தகி, மிடில் கிளாஸ் அப்பாயி என எட்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த எட்டு படங்களும், அந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. ‘ஒரே ஆண்டில் எட்டு படங்களுக்கு இசையமைத்து எட்டு படங்களின் பாடல்களையும் ஹிட்டாகிய ஒரே இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்’ என்று ஊடகங்கள் பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல் ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை, பட வெளியீட்டிற்கு முன் வாரந்தோறும் சிங்கிள் சிங்கிள் ட்ராக்காக வெளியிடும் உத்தியை தெலுங்கில் ‘கைதி நம்பர் 150 ’ மூலம் தொடங்கிவைத்ததும் இவர் தான். இன்று அது அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபலமாகிவிட்டது. லிரிக் வீடியோஸில் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் புகைப்படத்தையும், கான்செப்ட்டையும், கிராபிக்ஸையும் இணைத்து வெளியிடுவதையும் தேவிஸ்ரீபிரசாத் தான் அறிமுகப்படுத்தினார் என்பதும் கவனிக்கத்தக்கது.

தற்போது இவர் தமிழில் ‘சாமி ஸ்கொயர்’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். பாடல்கள் அனைத்து மிக நன்றாக வந்திருக்கின்றன. படப்பிடிப்பு தளத்தில் படத்தின் பாடலை கேட்ட படக்குழுவினர் அனைவரும் இந்த ஆண்டிற்கான ஹிட் ஆல்பம் இது என்று தெரிவித்தபோது தேவி ஸ்ரீபிரசாத்தின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு தெரியவருகிறது என்கிறார்கள் திரையுலகினர்.