மும்பையில் தாதாவாக இருந்த டேவிட் (அரவிந்த் சாமி) தான் டான் என்ற பழைய நினைவுகளை மறந்து தியேட்டரில் பாப்கார்ன் விற்பவராக இருக்கிறார். இவர் தாதாவாக இருக்கும் பொழுது கைமாற்ற வைத்திருந்த தங்கத்தை தவறவிட்டதால் அதனை தற்போது மீட்டெடுப்பதற்காக ஒரு குழு திட்டமிட்டு வருகிறது. இதனால் இவருக்கு ஒரு நண்பரை தயார் செய்து அவருடன் நெருங்கி பழகி பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வர முயற்சி செய்கின்றனர்.இதற்காக குஞ்சக்கோ போபனை அனுப்பி வைக்கின்றனர். டேவிட்டுடன் நெருங்கி பழகி அவரிடம் இருந்து அந்த நினைவுகளை வாங்க அவர் முயற்சி செய்கிறார். இதனிடையில் இருவரும் நெருங்கி பழக, நல்ல நண்பர்களாகின்றனர். அந்த நினைவுகளை கொண்டு வந்துவிட்டால் டேவிட்டை கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் செய்வதறியாது இருக்கிறார்.
இறுதியில் டேவிட்டிடம் இருந்து பழைய விஷயங்களை பெற்றாரா? இல்லையா? எப்படி அவருக்கு அந்த நினைவுகளை வரவைத்தார்? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிகதை.அரவிந்த் சாமியின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பழைய நினைவுகளை மறந்த கதாப்பாத்திரத்தில் எதார்த்தமாக நடித்து பாராட்டுக்களை பெறுகிறார். குஞ்சக்கோ போபன் அவருடைய பணியை சிறப்பாக செய்துள்ளார். முதல் பாதியில் அவரின் திறமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் பில்டப் காட்சிகள் அவருக்கு பொறுந்தவில்லை.
வித்யாசமான கதையும் விறுவிறுப்பான திரைக்கதையும் அமைத்து ரசிகர்களின் கைத்தட்டல்களை பெறுகிறார் இயக்குனர் ஃபெலினி. கேங்ஸ்டர் பாணியில் கொண்டு சென்று அதனை விறுவிறுப்பான திரில்லாராக மாற்றியிருக்கிறார். இருந்தும் இரண்டாம் பாதியில் கொடுக்கப்படும் பில்டப் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது.இயக்குனர் நினைத்த விஷயங்களை நம் கண்முன் கொண்டு வருவது போல் காட்சியமைத்து பாராட்டுக்களை பெறுகிறார் ஒளிப்பதிவாளர் கெளதம் ஷங்கர். காட்சி வடிவமைப்புகளின் பார்வையாளர்களை அந்த இடத்திற்கே கொண்டு செல்கிறது. படத்தின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளது. எதார்த்த இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.எச்.காசிப்.