விக்ரம் நடிப்பில் தமிழ், இந்தியில் வெளியான `டேவிட்’ படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கும் மலையாள படம் `சோலோ’. இதில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய ஜோடியாக தன்ஷிகா நடித்திருக்கிறார்.
ஸ்ருதி ஹரிஹரன், சாய் தமங்கர், பிரகாஷ் பேலவாடி, அன்சன் பால், அன் அகஸ்டின், சதீஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி உள்ளது. 4 விதமான கதைகளுடன் உருவாகியிருக்கும் இப்படத்தில் 3 ஒளிப்பதிவாளர்கள் 11 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர். மொத்தம் 15 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பிஜோய் நம்பியார், துல்கர் சல்மான், மணிரத்னம், படத்தின் தயாரிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய துல்கர் சல்மான், “என் பிறந்த நாளான இன்று இந்த விழா நடைபெற்றது என்னுடைய அதிர்ஷ்டம். சோலோ படம் மாறுபட்ட கதையம்சத்தைக் கொண்டது. இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. சிறந்த இசை, சிறந்த பாடல்கள் என சிறப்பான முறையில் வந்திருக்கிறது. இப்படம் தமிழில் என்னுடைய 3வது படம். 3 படத்தின் விழாக்களிலும் இயக்குநர் மணிரத்னம் கலந்து கொண்டது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.” என்றார்.