ரக்ஷித் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘777 சார்லி’ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், ரக்ஷித் ஷெட்டியை தொலைபேசியில் அழைத்து, ஒட்டுமொத்த குழுவின் கடின உழைப்பைப் பாராட்டினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் ரக்ஷித் ஷெட்டி, “இந்த நாளின் தொடக்கமே மிக அற்புதமாக இருக்கிறது.. ரஜினிகாந்த் சாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நேற்று இரவு அவர் `777 சார்லி’ படம் பார்த்து, அதுகுறித்து பாராட்டியுள்ளார். படம் உருவாக்கப்பட்ட விதம், அதன் வடிவமைப்பு
முதலானவற்றைப் பாராட்டிய அவர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி குறித்து மிகவும் வியந்து பாராட்டினார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து மற்றொரு பதிவில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி, `சூப்பர்ஸ்டாரிடம் இருந்தே நேரடியாக இத்தகைய வார்த்தைகளைக் கேட்பது மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி ரஜினிகாந்த் சார்!” என்று கூறி நடிகர் ரஜினியையும் தனது பதிவில் டேக் செய்துள்ளார்.இதே போல நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ‘777 சார்லி’ படத்தை பாராட்டியுள்ளார்.
பரம்வாஹ் ஸ்டூடியோஸ் பேனரில் ஜி எஸ் குப்தா மற்றும் ரக்ஷித் ஷெட்டி தயாரிப்பில் கிரண்ராஜின் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள ‘777 சார்லி’-யை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ் வெளியிட்டது.சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமான ‘777 சார்லி’, சார்லி எனும் நாய்க்குட்டி மற்றும் அதன் ‘நண்பனான’ தர்மாவை சுற்றி சுழலும் கதை ஆகும்.
சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, தானிஷ் சேட், பாபி சிம்ஹா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘777 சார்லி’-க்கு நோபின் பால் இசை அமைத்துள்ளார். அர்விந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவை கையாள, பிரதீக் ஷெட்டி படத்தொகுப்புக்கு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
படக்குழுவினர்:
நடிப்பு: சார்லி, ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா மற்றும் பலர்.
தயாரிப்பு: ஜி எஸ் குப்தா மற்றும் ரக்ஷித் ஷெட்டி
வெளியீடு: கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ்
எழுத்து & இயக்கம்: கிரண்ராஜ் கே
இசை மற்றும் பின்னணி இசை: நோபின் பால்
ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ் காஷ்யப்
படத்தொகுப்பு: பிரதீக் ஷெட்டி
தயாரிப்பு வடிவமைப்பு: உல்லாஸ் ஹைடூர்
ஒலிப்பதிவு: எம் ஆர் ராஜகிருஷ்ணன்
கலரிஸ்ட்: ரமேஷ் சிபி
ஆடை வடிவமைப்பாளர்: பிரகதி ரிஷப் ஷெட்டி
சண்டைக்காட்சிகள்: விக்ரம் மோர்
நாய் பயிற்சியாளர்: பிரமோத் பி.சி
வசனம்: கே என் விஜய்குமார் (தமிழ்)
பாடல்கள்: மோகன் ராஜா, மதுரகவி, முத்தமிழ் (தமிழ்)