இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 19–ந் தேதியன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்குவதற்கான கடிதம், தமிழக அரசிடம் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி டெல்லி வட்டாரத்தில் நேற்று விசாரித்தபோது, பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலம் குஜராத்துக்கு சென்றிருப்பதாகவும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) டெல்லிக்கு வந்துவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் செல்கிறார்.
எனவே, நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது. மேலும், அவருடன் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் செல்கின்றனர்.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் உள்ள வறட்சி நிலை குறித்தும், மத்திய அரசு தரவேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் பிரதமரிடம், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு அளிப்பார் என்று கூறப்படுகிறது.