எனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்
எனது பின்புலத்தை இங்கு வருகைப்புரிந்த அனைவரும் நிரூபித்துவிட்டார்கள் – எடிட்டர் மோகன்
எடிட்டர் மோகன் எழுதிய ‘வேலியற்ற வேதம்’ மற்றும் அவரது மனைவி வரலட்சுமி மோகன் எழுதிய ‘தனிமனிதன்’ மற்றும் ஆகிய நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் வாழ்த்தி பேசியதாவது:-
மோகன் ராஜா, ஜெயம் ரவி இணைந்து வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள்.
எங்கள் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அழைப்பாளர்கள் என்பதைவிட எங்கள் குடும்ப விழா என்று தான் கூற வேண்டும். அரூர்தாஸ் அய்யா எங்களை சிறுவயதில் தூக்கி வளர்த்தவர். எனக்கு முதன்முதலாக வாய்ப்பு கொடுத்தவர் அர்ஜுன் சார். என்னுடைய முதல் கதாநாயகன் அர்ஜுன் சார் தான்.இவ்விழாவிற்கு வந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு முத்துக்கள்.
‘ஜெயம்’ ரவி பேசும்போது,
எங்கள் குடும்பத்திற்கு இன்று முக்கியமான நாள். எங்கள் பெற்றோருடைய வாழ்க்கையின் சாராம்சத்தைக் கொண்டாடும் விழா. பாக்யராஜ் அவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை உள்ள மனிதர். எங்கள் குடும்பத்தையும், என்னையும் என் அண்ணாவையும் சினிமாவில் வெற்றிபெற வைத்து மகிழ்ந்த மனிதர். என்னை முதன்முதலாக கண்டித்தவர் பிரபு சார் தான். அண்ணா கூறியதுபோல் என்னுடைய முதல் இயக்குநரும் அர்ஜுன் சார் தான். எனக்கு என்னையே அடையாளம் காண்பித்தவர் டைரக்டர் ஜனநாதன் தான். சமத்துவத்தைப் பற்றி நான் கற்றுக் கொண்டதும் அவரிடம் தான். நான் முதன்முதலாக பணியாற்றியது தாணுவிடம் சாரிடம் தான்.
புலவர் ராமலிங்கம் பேசும்போது,
எடிட்டர் மோகன் மற்றும் அவருடைய மனைவி வரலட்சுமி மோகன் எழுதிய ‘தனிமனிதன்’ மற்றும் ‘வேலியற்ற வேதம்’ 34 வருட அனுபவத்தில் கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் புத்தகம் எழுதி வெளியிடுவதைப் பார்ப்பது இதுவே முதல் முறை. ‘வேலியற்ற வேதம்’ அறம் சார்ந்த விஷயங்களை வாழ்வியலை 33 இயல்களாக கூறியிருக்கிறார் வரலட்சுமி. எடிட்டருக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கிறார் வரலட்சுமி. புத்தகத்தின் அட்டை படத்தைப் பார்த்தாலே படிக்க தூண்டும் வகையில் இருக்கிறது.
ஒருவேளை எனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் சேர்ப்பேன். வரலட்சுமி அம்மையார் எத்தனை புத்தகங்களை வாசித்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு இலக்கியங்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். பெற்றோர்களைப் பற்றி பிள்ளைகள் பாராட்டுவது பெரும் பாக்கியம். அவருடைய மூன்று பிள்ளைகளும் அணிந்துரையில் அவரைப் பற்றி பாராட்டி எழுதியதிலிருந்து அவர் பிள்ளைகளை வளர்த்த விதம் தெரிகிறது என்றார்.
இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,
சினிமாவில் நான் நேசிக்கும் மரியாதைக்குரிய மனிதர் எடிட்டர் மோகன். இந்த புத்தகத்தில் அவர் திருமங்கலத்திலிருந்து நடந்தே வந்தார் என்று எழுதியதைப் படித்த பிறகும் இன்னமும் என் மனதில் அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. பிள்ளைகளை பெற்றோர் முன்னேற்றுவதும், பெற்றோருக்கு பிள்ளைகள் கடமை ஆற்றுவதும் இப்படி ஒரு குடும்பம் அமைவதும் மிக அரிது மற்றும் பெருமைக்குரியது என்றார்.
வசனகர்த்தா ஆரூர்தாஸ் பேசும்போது,
தமிழாக்கம் உட்பட 1000 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முதன்முதலாக வசனம் எழுதிய படம் ‘பாசமலர்’. அதைத் தொடர்ந்து 28 படங்களுக்கு எழுதியிருக்கிறேன். அதேபோல், எம்.ஜி.ஆர்.-க்கும் 21 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன்.
எடிட்டர் மோகனுக்கு அமைந்த வாழ்க்கை சாகசம் நிறைந்தது. 6-ஆம் வகுப்பு மட்டுமே படித்து 13 வயதில் மாதக்கணக்கில் திருமங்கலத்திலிருந்து தியாகராய நகர் வரை நடந்தே வந்திருக்கிறார். படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் கிடையாது. அதை, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா இன்னும் பலரை உதாரணமாக கூறலாம். எடிட்டர் மோகனுக்கு 10 தமிழாக்க படங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது,
என்னுடைய படங்களுக்கு எடிட்டிங் செய்த விட்டல் தான் எடிட்டர் மோகனை அறிமுகப்படுத்தினார். நானும் இந்த புத்தகத்தை முழுமையாகப் படித்தேன். இந்த புத்தகம் ஆங்கில புத்தகத்தைவிட சிறப்பாக இருக்கிறது. வறுமையில் வாழ்ந்த மோகனின் வாழ்க்கை இன்று வளமையாக இருக்கிறது. இதற்கு காரணம் அவருடைய கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான். முடியும் என்று கூறி சாதனையாளராக உயர்ந்திருக்கும் மோகனின் வாழ்க்கையே அனைத்து இளைஞர்களுக்கும் உதாரணம். அந்த காலத்திலேயே இருவீட்டார் சம்மதத்துடன் மதம் மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் தான் மோகன் – வரலட்சுமி தம்பதிகள். இன்று அவர்களுடைய பிள்ளைகளை ஒழுக்கமாக வாழ்ந்து காட்டி வளர்த்திருக்கிறார்கள். நல்ல நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இவ்விழாவை எடுத்துக்காட்டு விழாவாக கூற ஆசைப்படுகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசும்போது,
‘தனிமனிதன்’ புத்தகமும், ‘வேலியற்ற வேதம்’ புத்தகமும் இவர்களின் குடும்பத்திற்கு காலத்தால் அழியாத பெட்டகமாகவும், கருவூலமாகவும் அமையும் என்றார்.
தயாரிப்பாளர் சத்யஜோதி டி.தியாகராஜன் பேசும்போது,
சினிமாத்துறையில் நான் எடிட்டர் மோகனை முன்மாதிரியாக பார்க்கிறேன். தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். அவரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார்.
நடிகர் பிரபு பேசும்போது,
என் அப்பா அவரை முன்னேற்றியவர்களைப் பற்றி இறுதி மூச்சுவரை பேசிக் கொண்டிருந்தார். அதேபோல், எடிட்டர் மோகனும் ‘தனிமனிதன்’ புத்தகத்தில் அவரின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மறக்கமால் குறிப்பிட்டிருக்கிறார். சினிமாவைக் காதலிப்பவர்கள் எடிட்டர் மோகன் குடும்பத்தார்கள். கடுமையான உழைப்பாளர்கள் என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது,
நான் வெற்றி படம் தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்தது எடிட்டர் மோகன் தான். அவரிடம் கதை கூறிவிட்டு தான் படம் தயாரித்தேன். ‘ஜெயம் ரவி’ நடித்த ‘கோமாளி’ படம் மாபெரும் வெற்றியடைந்ததற்கு மகிழ்ச்சி என்றார்.
நடிகர் அர்ஜுன் பேசும்போது,
அப்பா எடிட்டர், அம்மா இரட்டை எம்.ஏ., பட்டம் பெற்றவர், மூத்த மகன் இயக்குநர், இளைய மகன் நடிகர், மகன் பல் மருத்துவர் என்ற சிறந்த குடும்பத்தின் சிறப்பான விழா. எடிட்டர் மோகன் படத்தில் நான் நடித்த தெலுங்கு படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்காக பேசிய ஊதியத்தொகைக்கும் மேலாக எனக்கு கொடுத்தார். அவரின் பண்பைக் கண்டு நான் வியந்தேன் என்றார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,
நானும் எடிட்டர் மோகன் மாதிரி சினிமாவில் சாதிப்பதற்காக சென்னைக்கு வந்தவன் தான். ஆனால், இரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் தான் வந்தேன். அவருடைய திருமணம் மாதிரி எனக்கும் மதம் மாறிய காதல் திருமணம் தான். என் மகனை நான் நடிகனாக்கினேன். மோகன் இயக்குநராக்கியிருக்கிறார். இதுபோல எனக்கும் அவருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்பதை அவருடைய புத்தகத்தைப் படித்து தெரிந்து கொண்டேன். அதிலும் எனக்கு பிடித்த வரிகள் வரலட்சுமியை வரம் என்று தன் மனைவியைக் குறிப்பிடுகிறார் மோகன்.
1980 களில் நான் திரையுலகில் அதிகமாக கேட்ட பெயர் எடிட்டர் மோகன் தான். அப்போது அவரை நான் பார்த்ததில்லை. ஆனால், அவரின் திறமையை மற்றவர் பேசக் கேட்டிருக்கிறேன் என்றார்.
ஷோபா சந்திரசேகர் பேசும்போது,
வரலட்சமி மோகன் எழுதிய ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தைப் படித்தேன். திருக்குறளைப் பற்றி 33 இயல்களிலேயே எழுதியிருந்தார். பின்பு தான் புரிந்து கொண்டேன் அவர் எடிட்டரின் மனைவி என்று. இருப்பினும் இந்நூலை சிறப்பாக எழுதிய வரலட்சுமி மோகனுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் பாண்டியராஜன் பேசும்போது,
மகன்கள் வாழ்த்துரையும், நன்றியுரையும் கூறுகிறார்கள். மகள் பல் மருத்துவர், மனைவி புத்தகம் எழுதுகிறார், இவர் தன் சுயசரிதை எழுதுகிறார். இந்த விழாவைப் பார்க்கும் போது, என்னுடைய வாழ்க்கையையும், நான் எப்படி வாழ்ந்திருக்கிறேன் என்று பாருங்கள் என்று தோன்றுகிறது. அனைவரும் இவர் போல வாழ வாழ்த்துகிறேன் என்றார்.
எடிட்டர் மோகன் பேசும்போது,
எல்லோரும் என்னைப் பற்றி கூறிவிட்டார்கள். ஆகையால், என்னைப் பற்றி நான் கூற எதுவுமில்லை. என்னுடைய பின்புலத்தைப் பற்றி இங்கு வருகைப்புரிந்த அனைவரும் நிரூபித்துவிட்டார்கள். இனி எனக்கு எந்த கவலையுமில்லை என்றார்.
வரலட்சுமி மோகன் பேசும்போது,
இவ்விழா நூல் வெளியீட்டு விழா மாதிரியே தெரியவில்லை. அனைவரும் எங்கள் குடும்பத்தினர்களாகவே கலந்து கொண்டார்கள்.
எங்களுக்கு திருமணமானதும் என் கணவர் என்னிடம் பேசிய முதல் வார்த்தை, நீ என்னுடைய இரண்டாவது மனைவி என்றார். அவருக்கு தொழில் தான் முதல் மனைவி. நாங்கள் எடுத்த முதல் படம் ‘ஜெயம்’ என்பதால் ஜெயம் குடும்பத்தார் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர் ராஜேஷ், தயாரிப்பாளர் AL. அழகப்பன், டைரக்டர் மனோஜ்குமார், பாண்டியராஜன், SP.ஜனனாதன், கலைசெல்வி புலியூர் தேசிகன், கமலா வள்ளியப்பன், ரவிவர்மா, பாடலாசிரியர் காமகோடியன், பா.விஜய் , விவேகா ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக, எடிட்டர் மோகன் எழுதிய ‘தனிமனிதன்’ புத்தகத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட நடிகர் அர்ஜுன் பெற்றுக் கொண்டார். வரலட்சுமி மோகன் எழுதிய ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை ஷோபா சந்திரசேகர் வெளியிட நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.
எடிட்டர் மோகன் , வரலக்ஷ்மி மோகன் நன்றி கூறினார்கள்.