200 படங்களுக்கு மேல் பணிபுரிந்த தென்னிந்திய திரையுலகின் முக்கியமான எடிட்டர் சேகர் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 22) காலை 6 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இவரது மனைவியின் பெயர் சுந்தரி சேகர். இவருக்கு 3 பெண் குழந்தைகள். தீபலட்சுமி, திலகவதி, நித்யா ஆகிய மூவருக்குமே திருமணமாகிவிட்டது. இவரது இறுதிச்சடங்கு இன்று (மார் 22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
பாசில், சித்திக் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு ஆஸ்தான எடிட்டராக பணிபுரிந்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படம் (தச்சோலி அம்பு), முதல் 70 எம்.எம் (படையோட்டம்) மற்றும் இந்தியாவின் முதல் 3டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ ஆகிய படங்களின் எடிட்டர் இவர். தான் எந்த ஒரு சாதனை செய்தாலும், அதை தன் வேலை தான் பேச வேண்டும், தான் பேசக்கூடாது என்ற குறிக்கோளுடனே வாழ்ந்திருக்கிறார். இவரைப் பற்றி WIKIPEDIA போன்ற இணையங்களில் தகவல்கள் இல்லாதது துரதிஷ்டம்.
‘வருஷம் 16’ படத்துக்காக தமிழக அரசு விருது மற்றும் ‘1 முதல் 0 வரை’ மலையாள படத்துக்காக கேரள அரசின் விருது வென்றிருக்கிறார். தமிழில் ‘சாது மிரண்டால்’ இவர் பணிபுரிந்த கடைசிப் படம். அதற்குப் பிறகு தனது உதவியாளர்களை வைத்து படங்களுக்கு எடிட் செய்து, அவர்களுடைய பெயரையே தலைப்பில் போடவைத்து அழகு பார்த்தவர் எடிட்டர் சேகர். திரையுலகில் பணிபுரிந்தது போதும் என திருச்சி அருகே உள்ள தனது சொந்த ஊரான தென்னூரில் போய் செட்டிலாகிவிட்டார்.
இப்போதுள்ள ஸ்பாட் எடிட்டிங் போல் இல்லாமல், உதவி இயக்குநர் போல இவருடைய காலத்தில் படப்பிடிப்புக்குச் சென்று இயக்குநர்கருடனே பணிபுரிந்திருக்கிறார். இந்தக் காட்சி போதும், இந்தக் காட்சி இன்னும் நீளமாக எடுங்கள் போன்றவற்றை படப்பிடிப்பின் போதே இருந்து வாங்கியிருக்கிறார். இவருடன் பணிபுரிந்த இயக்குநர்களுக்கு மட்டுமே, இவர் எவ்வளவு முக்கியமானவர் என்பது தெரியும்.