எலெக்ஷன் திரை விமர்சனம்
மக்களுக்கு எப்படி இது தேர்தல் நேரமோ அதே போல் தமிழ் சினிமாவுக்கும் தேர்தல் காலம். வரிசையாக தேர்தல் தொடர்பான படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து இந்த வாரம் வந்துள்ள படம் எலெக்ஷன். சேத்து மான் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தமிழ் இயக்கத்தில் விஜயகுமார், ப்ரீத்தி அஷ்ராணி, ரிச்சா ஜோஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து அதில் உள்ள அரசியலை பேசுகிறது இப்படம். விஜயகுமாரின் தந்தையான மரியம் ஜார்ஜ் ஆத்தூரில் ஆளுங்கட்சியின் விசுவாசமான தொண்டனாக உள்ளார். பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தும் கட்சி அவரை கண்டுகொள்ளாமல் விடுகிறது. ஆனாலும் கட்சிதான் முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அங்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கிறார்கள். இந்த முறையும் அவருக்கு சீட் மறுக்கப்படுகிறது. அவரது நண்பனான திலீபனின் தந்தைக்கும் சீட் மறுக்கப்பட அவர் தனித்து நிற்பதாகவும் ஜார்ஜ் மரியம் உடனிருந்து ஆதரவு தரவேண்டும் என கேட்கிறார் ஆனால் அவரோ கட்சியை விட்டுத்தர முடியாது என்கிறார். தேர்தலில் திலீபனின் தந்தை தோற்றுவிட தனது மகளை விஜயகுமாருக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து விடுகிறார். சிறுவயது முதல் காதலித்து வந்த பெண் கிடைக்காத விரக்தியில் வாழ்ந்துவரும் விஜயகுமாருக்கும் ப்ரீத்தி அஷ்ராணிக்கும் திருமணம் பெற்றோர் செய்துவைக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இறுதியில் தேர்தலில் வென்றாரா? அரசியல் சூழ்ச்சி அவரையும் அவரது குடும்பத்தினரையும் விட்டுவைத்ததா? என்பதே மீதிக்கதை.
ஒரு மாவட்டத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. அரசியல் துரோகம், பழிவாங்கல், ஏமாற்றம், தோல்வி, குரோதம், வன்மம் என அனைத்தையும் நன்றாக எழுதியுள்ளார் இயக்குனர் தமிழ். கட்சிக்குள் நடக்கும் அரசியல், இரு தரப்பினர் இடையே புகைந்து கொண்டு இருக்கும் வன்மம் எப்படி ஒரு குடும்பத்தை சீரழிக்கிறது என்பதும் இதில் சொல்லப்பட்டுள்ளது.
விஜயகுமார் கடைநிலை தொண்டனின் மகனாக அப்படியே பொருந்திப் போகிறார். தேர்தல் அரசியல் பற்றிய புரிதல் இன்றி தந்தைக்காக தேர்தலில் போட்டியிடும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். கடைசி வரை அப்பாவுக்கு எதுவும் செய்யாத கட்சியை எதிர்ப்பதாகட்டும் நண்பனின் துரோகத்தை கண்டு கலங்குவதாகட்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஜார்ஜ் மரியான் மாதிரி ஆட்கள் நிச்சயம் எல்லா கட்சியிலும் இருப்பார்கள். கடைசி வரை கட்சிக்காக உழைத்தும் எந்த பயனும் அனுபவிக்காமல் காணாமல் போய்விடுவர். ஜார்ஜ் மரியான் அதை அற்புதமாக செய்துள்ளார்.
ரிச்சா ஜோஷி கொஞ்ச நேரமே வந்தாலும் கவனிக்க வைக்கிறார். ப்ரீத்தி அஷ்ராணிக்கு கதைக்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் நன்றாக செய்துள்ளார். மாமாவாக வரும் பவல் நவகீதன் நடிப்பு நன்று. திலீபன் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். தமிழ் சினிமா இன்னும் இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அழகிய பெரியவன், தமிழ் , விஜயகுமார் ஆகியோரின் வசனங்கள் உண்மையை தோல் உரித்து பேசியுள்ளன.
மகேந்திரன் ஜெயராஜூவின் ஒளிப்பதிவு ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளை அழகாக படமாக்கியுள்ளன. கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை நன்று. அரசியல் என்றால் என்ன என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ளும் வகையில் படமெடுத்துள்ளார் இயக்குனர் தமிழ். மொத்தத்தில் எலெக்ஷன் – வெற்றி. ரேட்டிங் 3.5/5.