நட்ராஜும், ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஓவியம் வரைவதில் வல்லவர்கள். இதில் நட்ராஜ், ரஜினி ரசிகர். ராஜாஜி, கமல் ரசிகர். ரஜினி-கமல் படங்கள் வெளியாகும் போது இருவரும் கட்-அவுட் வரைந்து தியேட்டரில் வைத்து கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.
அப்போது ரஜினி-கமல் ரசிகர்களின் மோதலால் அரசியல் வாதியாக இருக்கும் ராதாரவியின் தியேட்டர் பலிகாடா மாறுகிறது. இதை தடுப்பதற்காக தன்னுடைய அடியாளான விஜய் முருகனை வைத்து சூழ்ச்சி செய்து வருகிறார்.
இதற்கிடையில் நட்ராஜும், ராஜாஜியும் வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்களாக இருந்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் நிலையில், ராஜாஜியின் தங்கையான சஞ்சிதா ஷெட்டியும், நட்ராஜும் காதலிக்கின்றனர். இவர்கள் காதலால் நட்ராஜ், ராஜாஜி நட்பு பிரிந்து மோதலாக மாறுகிறது.
இந்நிலையில் ரஜினி-கமல் படமே எடுக்கக்கூடாது என ராதாரவி முடிவு செய்கிறார். இதனால், நட்ராஜுக்கும் ராதாரவிக்கும் மோதல் ஏற்படுகிறது. இறுதியில் ராதாரவிக்கும் நட்ராஜ்க்கும் இடையேயான பிரச்சனை தீர்ந்ததா? நட்ராஜும், ராஜாஜியும் நட்பானார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ரஜினி ரசிகராக நடித்திருக்கும் நட்ராஜ், நடை, உடல் மொழி, உள்ளிட்டவைகளில் ரஜினி போல் நடிக்க முயற்சித்திருக்கிறார். வேகமாக நடப்பது, வேகமாக பேசுவது, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராதாரவியுடன் பேசும் வசனங்களில் அப்லாஸ் வாங்குகிறார்.
கமல் ரசிகராக நடித்திருக்கும் ராஜாஜியும் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் வீரவசனம் பேசினாலும், கடைசியில் அடி தான் வாங்கி வருகின்றார். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கதாநாயகிகளாக நடித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டியும், பார்வதி நாயரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தான் அனுபவசாலி என்பதை ஒவ்வொரு படத்திற்கும் நிருபித்து வருகிறார் ராதாரவி. கம்பீரமான அரசியல்வாதியாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார். ஓட்டுக்காக அடுத்த நொடியே மாறும் காட்சியில் அதகளப்படுத்தியிருக்கிறார்.
1980களின் பின்னணியில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராமு செல்லப்பா. குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் ரஜினி-கமல் ரசிகர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நம் கண்முன்னே காட்டியதற்கு மிகப்பெரிய கைத்தட்டல். ஆனால், அந்த ரசிகர்களின் சண்டையை ஆரோக்கியமாக காட்டியவிதம் அருமை. படத்தில் வரும் கட்-அவுட்டுகள் எல்லாம் தத்ரூபமாக இருக்கிறது. வரைந்தவர்கள் பெரிய பாராட்டுக்கள்.
நடராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். 80களில் பின்னணியில் கதை நகருவதால் அதற்கான ஒளிப்பதிவு சிறப்பாக செய்திருக்கிறார் எம்.சி.கணேஷ் சந்திரா.
சினிமாவின் பார்வையில் ‘எங்கிட்ட மோதாதே’ சிறப்பு.