தமிழக ஆளுநராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு முடிவடைந்ததையடுத்து, மகாராஷ்டிர மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தமிழகத்திற்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது, தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் சென்னை வந்த புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு சென்னை விமான நிலையத்தில் அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. ராஜேந்திரன், கமிஷனர் விஸ்வநாதன் ஆகியோர் சால்வைகள் அணிவித்தும், பூங்கொத்துகள் வழங்கியும் புதிய ஆளுநரை வரவேற்றனர்.
ஆளுநர் வருகையின்போது, சென்னை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நாளை காலை 9.30 மணியளவில் பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ஆளுநர் மாளிகையில் தயாராகி வருகின்றன.