full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

முதல் முறையாக பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’.

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
 
 
உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காலா, லூசிஃபர் படங்களில் இதற்கு முன்பு பாடல் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் சார் இருவருமே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர் என்றார் பாடலாசிரியர் லோகன்.
 
நானும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நான் துவண்டு போயிருந்த காலங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர் அவர். அவரை போலவே நரேந்திரன் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். ஜிவி பிரகாஷ் உடன் கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்தேன். அவருடன் மிகவும் நெருக்கமாகும் வாய்ப்பு அமைந்தது. வண்ணாரப்பேட்டையில் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது என்றார் நடிகர் எம் எஸ் பாஸ்கர்.
 
 
எஸ் ஃபோகஸ் பெயருக்கு ஏற்ற மாதிரியே மிகவும் ஃபோகஸ் உடன் படத்தை மிக கவனமாக எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் ஒரு ஹிட்லர் மாதிரி, அவர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம். அவர் நினைத்ததை செய்யட்டும் என நினைப்பவன் நான். கதை கேட்கும்போது நிறைய நல்ல கதைகளை முதல் 10 நிமிடங்களிலேயே உணர்ந்திருக்கிறேன். இதில் அந்த உணர்வு கிடைத்தது. இது வெறும் தர லோக்கல் படம் மட்டுமல்ல, தரமான லோக்கல் படம். எம்ஜி ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் தொப்பி அணிந்து நடிக்கலாமா என்ற ஒரு குழப்பம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த கதாபாத்திரம் மிகவும் நல்லவர். யாரையும் தவறாக சித்தரிக்கும் கதாபாத்திரம் இல்லை என்பதால் நடித்தேன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையை பார்த்து மிரண்டிருக்கிறேன். அவர் நடிப்பும் சிறப்பாகவே இருக்கிறது. பாலய்யா, எஸ்வி சுப்பையா மாதிரி நடிகர்கள் இந்த காலத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை எம் எஸ் பாஸ்கர் போக்கியிருக்கிறார் என்றார் நடிகர் பார்த்திபன்.
 
நடன இயக்குனராக என் பயணத்தை துவக்கி வைத்தவர் தனுஷ் சார், என் இயக்குனர் கனவை நனவாக்கியவர் ஜிவி பிரகாஷ். குப்பத்து ராஜா கதை உருவாக நான் காரணமாக இருந்தாலும், அது படமாக மாறுவதற்கு காரணம் ஜிவி பிரகாஷ் குமார் தான். அவர் கதை மீது வைத்த நம்பிக்கை தான் காரணம். பார்த்திபன் சாரை நடிக்க வைக்க கேட்டு, அவரிடம் கதை சொல்ல போனேன். அதை கேட்ட அவர் ரொம்ப நல்லா இருக்கு, இதை அப்படியே படமாக எடுங்க, நான் நடிக்கிறேன் என நம்பிக்கை கொடுத்தார். எம்எஸ் பாஸ்கர் சார் என்னை மச்சான் என்று தான் அழைப்பார். கதையை கேட்டு கதாபாத்திரமாகவே மாறியவர். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும், அப்படி எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்கள் எனக்கு வரம். கலை இயக்குனர் கிரண் ராயபுரத்தை சார்ந்தவர் என்பதால் மிகவும் உதவிகரமாக இருந்தார். இந்த குழுவில் எங்களை மிகச்சிறப்பாக வழிநடத்தி சென்றவர் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சார். பலமான பல கலைஞர்கள் சேர்ந்தது தான் இந்த குப்பத்து ராஜா. பூனம் பஜ்வா, பாலக் லால்வானி இருவருமே மிகவும் அர்ப்பணிப்பு உடையவர்கள், சிறப்பாக நடித்திருக்கிறார்கள். யோகிபாபு காமெடியனாக இல்லாமல் மிக முக்கிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை வேறு பரிமாணத்தில் பார்ப்பீர்கள் என்றார் இயக்குனர் பாபா பாஸ்கர்.
 
பாபா பாஸ்கர் அவருடைய வாழ்வியலில் இருந்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார். ட்ரைலர் கமெர்சியலாக இருந்தாலும் படம் மிகவும் நல்ல கருத்துகளை கொண்டிருக்கிறது. சீரியஸான ஒரு கேங்க்ஸ்டர் படம். பார்த்திபன் சாரை ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு ராஜாவாக நடிக்கும் காட்சிகளில் நேரடியாக பார்த்தேன். அதற்கு பிறகு இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய கற்றுக் கொண்டேன். ஏற்கனவே பாலா சார், ராஜீவ் மேனன் சார் படங்களில் என்னை வேறு விதமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த படத்தில் இன்னொரு பரிமாணத்தில் நடித்திருக்கிறேன் என நம்புகிறேன் என்றார் நடிகர் ஜிவி பிரகாஷ்குமார்.
 
இந்த சந்திப்பில் கலை இயக்குனர் டிஆர்கே கிரண், தயாரிப்பாளர்கள் சிராஜ், சரவணன், நடிகை மதுமிதா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.