full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த சேத்துமான் பாராட்டப்படுவது உற்சாகத்தை தருகிறது. பா.இரஞ்சித்.

நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தான் பேசும் போது,

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மிக்க நன்றி. சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா..? என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை. அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃப்யூச்சர் ப்லிம்மாக இருக்குமா..? என்கின்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் தமிழிடமும் கேட்டேன். ஆனாலும் இந்தக் கதை என்னை வெகுவாக பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

எனக்கு எப்பொழுதுமே மெயின் ஸ்டிரீம் சினிமாக்களைப் போல Parallel சினிமாக்கள் என்று சொல்லப்படும் சுயாதீனத் திரைப்படங்கள் மீதும் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டு.

 சுயாதீனத் திரைப்படங்களில் இருக்கின்ற சுதந்திரம் பிடிக்கும். அது ஒரு கனவு போன்றது. அந்தக் கனவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இது போன்ற திரைப்படங்களை இயக்காமல் நான் கமர்ஸியல் சினிமாவிற்குள் நுழைந்துவிட்டேன். கட்டுப்படுத்த முடியாத யாராலும் தணிக்கை செய்ய முடியாத எண்ணங்களை திரைப்படங்களாக மாற்றுவது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன்.

இலக்கியத்திற்கு இருக்கின்ற கட்டற்ற சுதந்திரம் சினிமாக்களுக்கும் இருக்க வேண்டும் என்பது பிற உலக மொழித் திரைப்படங்களைப் பார்த்து நான் தெரிந்து கொண்ட ஒன்று. சுயாதீனத் திரைப்படங்களை இப்பொழுது என்னால் எடுக்க முடியாவிட்டாலும் கூட இனி வரும் காலங்களில் அது போன்ற திரைப்படங்களை எடுக்க வேண்டும் எனும் ஆர்வம் இருக்கிறது.

சரி இப்பொழுது சுயாதீனத் திரைப்படங்களை தயாரிப்போம் என்கின்ற எண்ணத்தில் இருந்தேன். அப்பொழுது தான் இயக்குநர் தமிழ் என்னை அணுகி இந்தக் கதையை கொடுத்தார். அதைப் படித்ததுமே எனக்கு அக்கதை மீது மிகப்பெரிய நம்பிக்கை வந்தது.

நான் எழுத்தாளர் பெருமாள் முருகனின் தீவிர விசிறி. யாரும் எனக்கு அவர் எழுத்தை அறிமுகப்படுத்தவில்லை. நானாக தேடி கண்டடைந்த எழுத்தாளர் அவர். அவருடைய எழுத்து என்னை ரொம்பவே பாதித்த ஒரு எழுத்து. அவரின் நிழல் முற்றம், கூளமாதாரி, கங்கணம் போன்ற நாவல்கள் எனக்கு பிடிக்கும்.

கூள மாதாரி நாவலில் திருச்செங்கோடு குறித்த விவரணைகள் அதிகமாக இருக்கும். மிக முக்கியமான நாவல் அது. குழந்தைகளின் உலகத்தை மிக அற்புதமாக அந்த நாவல் காட்சிப்படுத்தி இருக்கும்.  அந்த உலகம் எந்தளவிற்கு ஈவு இரக்கம் அற்ற உலகம் என்பதும் அதில் உண்டு. பண்ணை அடிமை முறையில் வாழும் குழந்தைகளின் வாழ்கையை உள்ளடக்கியது அந்த நாவல்.

சேத்துமான் திரைப்படம் ஒரு பரிட்ச்சார்த்த முயற்சி தான்.இது எப்படி திரைப்படமாக சாத்தியப்படும் என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இது ஒரு முக்கியமான திரைப்படமாக வரும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

இத்திரைப்படத்தை போட்ட பணம் திரும்ப வருமா..? என்கின்ற வணிக ரீதியில் அணுகாமல், பணம் திரும்ப வராவிட்டாலும் பரவாயில்லை.இந்தக் கதையை நாம் சொல்ல வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் இதை முன்னெடுத்துச் சென்றோம்.

நீலம் தயாரிப்பில்  படம் செய்யும் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்து வருகிறோம். கதை ஒரு முறை முடிவாகிவிட்டது என்றால், பின்னர் அதில் எந்தவித குறுக்கீடுகளும், நடிகர்கள் தொடர்பான சிபாரிசுகளும் இருக்காது.

நீலம் தயாரிப்பில் வந்த படங்களிலேயே இந்தத் திரைப்படம் இயக்குநரின் முழு சுதந்திரத்தோடு வெளியான படம் என்று சொல்லலாம். அவர் என்ன நினைத்தாரோ அப்படியே படத்தை எடுத்து முடிக்க நாங்கள் உறுதுணையாக இருந்திருக்கிறோம்.
 நான் பெரும்பாலும் கதைகளில் எதை சொல்லலாம், எதை சொல்லக்கூடாது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பைத் தான் நான் எடுத்துக் கொள்வேன். இப்படத்தில் இயக்குநர் தமிழ் எனக்கு அந்த வேலையைக் கூட கொடுக்கவில்லை.

 இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இத்திரைக்கதையில் ஒரு லேயராக கொண்டு வந்தது உண்மையாகவே மிகச் சிறப்பானது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு கோவிலுக்குள் நுழைந்துவிட்டார் என்பதால், அந்த தீட்டை கழிக்க கோவில் சார்பாக யாகம் நடத்தப்பட்ட இந்தியா இது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் குடியரசு தலைவராகவும் முடியும், சாதிய சிக்கல்களில் சிக்குண்டு போய் அல்லல்படவும் முடியும் என்பதை மிகச் சிறப்பாக காட்டிய திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். இது போன்ற அரசியல் பேசுவதில் இயக்குநர் தமிழுக்கு நல்ல தெளிவு இருக்கிறது. சிறிய முதலீட்டில் எடுத்து இப்படம் நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. z
 

இது படக்குழுவினர் உட்பட எங்கள் அனைவருக்குமே உற்சாகத்தை கொடுக்கிறது.

இப்பொழுது கூட கான் திரைப்படவிழாவிற்கு சென்று வந்தேன். அங்கு வருகின்ற படங்கள் எதுவுமே பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அல்ல. தான் சொல்ல வரும் கருத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உறுதித்தன்மையோடு குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் அங்கு தேர்வாகின்றன. அவையே அங்கு திரையிடப்படுகின்றன.

இது போன்ற சுயாதீனப் படங்களுக்கு மிகப்பெரிய வணிக சந்தையும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற கருத்தியல் அம்சம் கொண்ட சுயாதீனத் திரைப்படங்களை எடுக்க விரும்பும் இயக்குநர்கள் நீலம் புரொடெக்சனை அணுகலாம்.