அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நாயகன் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் மதிமாறன், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் படக்குழுவினருடன் இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
இயக்குனர் மதிமாறன் பேசும்போது,
‘விழாவிற்கு மிஷ்கின் சார் வந்ததில் எனக்கு பெருமை. இது நன்றியுரையாக எடுத்துக் கொள்ளலாம். வெற்றிமாறன் சார் என் குறும்படத்தை பார்த்து என்னை உதவியாளராக சேர்த்துக் கொண்டார். நீ உதவி இயக்குனராக எவ்வளவு வேலை செய்கிறீயோ அது உன் படத்தில் பிரதிபலிப்பாக மாறும் என்றார். அவரிடம் எடுத்த பயிற்சிதான் செல்ஃபி திரைப்படம். தாணு சார் அவர்களைப் பார்த்துதான் படம் எடுக்க வந்தோம். என் தயாரிப்பாளர் சபரிஷ், குணாநிதி இருவருக்கும் ரொம்ப நன்றி. இது லாபகரமான படமாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் சார் ஸ்டிடுயோவில்தான் எனக்கான நிறைய விசயங்கள் நடந்தது. ஜி.வி.பிரகாஷுக்கு ரொம்ப நன்றி. படப்பிடிப்பு தளத்தில் அவர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஒளிப்பதிவாளர் விஷ்ணு, எடிட்டர் இளையராஜா உள்பட படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. சுப்பிரமணிய சிவா சாருக்கும் நன்றி. இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும்” என்றார்.
ஜி.வி.பிரகாஷ் பேசும்போது,
‘அனைவருக்கும் வணக்கம்.. மிஷ்கின், கல்யாணம் சார் உள்ளிட்ட அனைவரின் வருகைக்கும் நன்றி. வெற்றிக்கு நன்றி சொன்னால் அதற்குள் மதிமாறனும் அடங்குவார். என் ஸ்டுடியோவில் முதன் முதலில் சந்திக்கும் போது, இவரோடு படம் பண்ணுவேன் என்று நினைக்க வில்லை. இந்தப்படத்தில் நிறைய விசயங்களைப் பற்றிப் பேசியிருக்கோம். நான் நடித்த படங்களைப் பார்க்கும் போது தவறுகளைத்தான் பார்ப்பேன். இந்தப்படம் ரொம்ப நல்லா வந்துருக்கிறது. தாணு சார் இந்தப்படத்திற்குள் வந்தபிறகு வணிக ரீதியான வெற்றிக்குள் வந்துவிட்டது’ என்றார்.
மிஷ்கின் பேசும்போது,
‘ரொம்ப அழகான மாலை இது. என் நண்பன் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் இன்று அங்கீகரிக்கப்படும் மேடை இது. வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம். என் உதவி இயக்குனர்களிடம் வெற்றிமாறன் ஜெயித்துக்கொண்டே இருப்பான் என்று சொன்னேன். அப்படி வெற்றியின் பட்டறையில் வந்தவன்தான் மதிமாறன்.மதிமாறனின் முன் வெற்றி தெரிகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம்மேனன் தான். யாரையாவது குத்திக்கிட்டே இருக்கிறான். இந்தப்படம் ஒரு கமர்சியல் படமாக இருக்கும். தற்போது இருக்கும் தலைமுறையினரின் பார்வை ரொம்ப அழகாக இருக்கிறது. இந்த டிரைலரில் ஒரு ஷாட்டில் சுப்பிரமணிய சிவா திறமையாக நடித்திருக்கிறார்.
தாணு சார் எனக்கு முதல் படம் முடிந்ததும் 50000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். இதுவரை பணத்தை திருப்பி கேட்கவில்லை. முதலில் ஒரு கதை சொன்னேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. இளைய தலைமுறை நிறைய பேருக்கு ஆலமரமாக தாணு சார் செயல்படுகிறார். ஜிவி பிரகாஷ் கூட நான் சீக்கிரம் வேலை செய்ய வேண்டும். சாமியின் காலில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது. என்னை பொருத்தவரை நல்லபடம் எடுப்பவன்தான் சாமி. மதிமாறன் நல்ல படம் எடுத்தால் நிச்சயமாக அவர் காலிலும் விழுவேன்” என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசும்போது,
‘மதிமாறன் இயக்கி இருக்கும் செல்ஃபி படம் கமர்சியலாக இருக்கிறது என்று மிஷ்கின் சொன்னார். அதற்கு நாங்கள் தான் காரணம். படம் பார்த்துவிட்டு கண்கள் பளித்து இயக்குனர் மதிமாறனை கட்டிபிடித்து ஆரத்தழுவார்கள். இந்தப்படம் மூன்று மடங்கு லாபத்தை தரும். அதில் மாற்றமே இல்லை. மதிமாறன் மிகச்சிறப்பான படமாக எடுத்துள்ளார். அடுத்த படம் மதிமாறன் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும். ஜி.வி.பிரகாஷுக்கு ஒரு சவாலான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படம் ஜி.வி.பிரகாஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். கவுதம் மேனனின் நடிப்பு ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. இயக்குனர் மதிமாறன் சொன்ன தேதியில் செலவை குறைத்து சரியாக படத்தை முடித்துக் கொடுத்தார். வெற்றியின் பாதையில் மதிமாறன் பயணித்தால் மிகப்பெரிய வெற்றியை அடைவார்” என்றார்.
வெற்றிமாறன் பேசும்போது,
‘மதிமாறன் சுய மரியாதையுடன் இருப்பவன். ஒரு குறும்படம் எடுத்து என்னிடம் வந்தான். அதைப்பார்த்து விட்டு அவனை என்னோடு சேர்த்துக்கொண்டேன். ஒரு நல்ல சினிமாவிற்கான எனர்ஜி அவனிடம் இருந்தது. ஆடுகளம் படம் ஷூட்டிங்கில் மதிமாறன் ஜூனியர். ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணியில் அவன் வேலை ரொம்ப பெரியது. செல்ஃபி படத்தின் படப்பிடிப்பை 29 நாட்களில் முடித்து விட்டான். ஆச்சர்யமாக இருந்தது.
இந்தப்படம் மூன்று மடங்கு லாபம் வரும் என்று தாணு சார் சொன்னார். ரொம்ப பெருமையாக இருக்கிறது. நான் படம் பார்த்து விட்டேன். படத்தில் ஒரு ரா எனர்ஜி இருக்கிறது. படத்தில் கேமரா எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்தில் கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்திருக்கிறார். டிரைலரை விட படம் சிறப்பாக இருக்கும். மதிமாறனுக்கு நிறைய பாராட்டுக்கள் வரும், கவனமாக இருக்க வேண்டும்.
நமது குறைநிறைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தாணு சார் இந்தப்படத்தை எடுத்துச் செய்யணும் என்று நினைத்ததுதான் நல்ல விசயம். தாணு சார் இப்படத்தை சுற்றி ஒரு விசயத்தைக் கொடுத்திடுவார். அவருக்கு ரொம்ப நன்றி. நான் ஒரு விசயத்தை சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன். மதிமாறன் எந்த ஒரு இடத்திலும் என் உறவினர் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை. எனக்கு வெற்றிமாறன் என பெயர் வைத்தது மதிமாறனின் அப்பா தான். அவர் என் மாமா. படத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் பேசினேன். எனக்குப் பிடித்தது என்றேன். நிச்சயமாக இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
குணாநிதி பேசும்போது,
‘2018 ஆம் ஆண்டு தாணு சார் என்னை போனில் அழைத்து, மதிமாறனை அறிமுகம் செய்து வைத்தார். மதிமாறன் சொன்ன கதை எங்களுக்கு மிகவும் பிடித்தது. நாங்கள் படம் தயாரிக்க தாணு சார் மிகவும் உதவினார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரித்து தியேட்டரில் வெளியிடுவது மிகவும் கடினம். அது தற்போது சாத்தியம் என்றால், அதற்கு ஒரே காரணம் தாணு சார். ஜி.வி.பிரகாஷ் மிகவும் அன்புக்குரியவர். செல்ஃபி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். மதிமாறன் இயக்கத்தில் நடித்ததது ரொம்ப பெருமையாக இருக்கிறது. வெற்றிமாறன் சார், மிஷ்கின் சார், சுப்பிரமணிய சிவா சார் ஆகியோர் வந்து வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி’ என்றார்.