‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையை எழுப்பினார்கள். தயாரிப்பாளர்கள் தரப்பில் பயணப்படி அதிகமாக வழங்க ஒத்துக்கொள்ளாததால் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.
இந்த பிரச்சினை குறித்து விஷால் தலைமையில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளைத் தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடந்த பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்டு 1ம் தேதி முதல் பெப்சி தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் முடிவெடுக்கப்பட்டது.
சினிமா படப்பிடிப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பெப்சி அறிவித்த இந்த வேலை நிறுத்தத்திற்கு தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் ஆதரவில்லை என்றும், இதேபோல் நடன இயக்குநர் ஷோபி மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு ஆகியோரும் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த செல்வமணி ரஜினியின் வேண்டுகோள் அறிக்கை ஒன்றை காண்பித்து பேசினார்.
அந்த அறிக்கையில், “எனக்கு பிடிக்காத சில சொற்களில் ‘வேலைநிறுத்தம்’ என்பது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகெளரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கம், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்.” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.