சம்பளம் தொடர்பான பேச்சு வார்த்தையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் சுமுகத் தீர்வு ஏற்படாததால், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதனால் ரஜினியின் ‘காலா’ உட்பட 37 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சினையை பேசித் தீர்க்கவேண்டும் என்று ரஜினிகாந்த்தும் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசிம்போது, ‘நடிகர் ரஜினி மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஏகமனதாக வேலைநிறுத்தத்தை திரும்ப பெறுகிறோம். நாளை முதல் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள். சம்பள பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது’ என்றார்.