full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஃபைட் கிளப் திரை விமர்சனம்

ஃபைட் கிளப் திரை விமர்சனம்!

 

உறியடி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர், நடிகர் விஜயகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஃபைட் கிளப். இப்படத்தை அப்பாஸ் அ.ரஹ்மத் இயக்கியுள்ளார். பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார்.

படத்தின் கதை பழவேற்காடு பகுதியில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. கதைப்படி விஜயகுமார் சிறு வயதில் இருந்தே கால்பந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவரது பகுதியில் உள்ள பசங்களுக்கு கால்பந்து சொல்லித் தரும் ஆசானாக இருக்கிறார் கார்த்திகேயன் சந்தானம். இவரது தம்பி அவினாஷ் ரகுதேவனும் சங்கர்தாஸும் சேர்ந்து ஏரியாவில் கஞ்சா தொழில் செய்து வருகின்றனர். இதனை கார்த்திகேயன் எதிர்க்கிறார். விஜயகுமார் அணிக்கும் சங்கர்தாஸின் மச்சான் சரவணவேலின் அணிக்கும் பள்ளிப் பருவத்தில் இருந்தே ஆகாது. எப்போதும் சண்டையிட்டுக் கொள்வார்கள். இந்த நிலையில் தங்களது வியாபாரத்திற்கு இடையூறாக இருக்கும் கார்த்திகேயனை சங்கர் தாஸ், அவினாஷ் இணைந்து கொலை செய்துவிடுகின்றனர். அவினாஷ் சிறை சென்றுவிட சங்கரதாஸ் ஏரியாவில் கவுன்சிலர் ஆகி விடுகிறார். சிறையில் இருந்து வெளியே வரும் அவினாஷ் தனக்கு துரோகம் செய்த சங்கர்தாஸை, விஜயகுமாரை வைத்து பழிவாங்க நினைக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை.

விஜயகுமார் மட்டுமே தெரிந்த முகம். தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். பள்ளி மாணவன், கல்லூரி காலம் என இரண்டு காலகட்டத்தில் நடக்கும் காட்சிகளில் மிளிர்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் புதிய முகங்களாக இருந்தாலும் நன்றாக நடித்துள்ளனர். குறிப்பாக ஜோசப்பாக நடித்துள்ள அவினாஷ் ரகுதேவன் நல்ல பாம்பின் குணாதிசயத்துடன் கவனிக்க வைக்கிறார். பெஞ்சமினாக நடித்துள்ள கார்த்திகேயன் சந்தானம் யார் இவர் என கேட்க வைக்கிறார். கிருபாவாக நடித்துள்ள‌ சங்கர் தாஸ் பெரிய வில்லனாக காட்டுகிறார்கள் ஆனால் அவர் பதுங்கியே செல்கிறார். நடிப்பில் குறையில்லை.

கார்த்தியாக நடித்துள்ள சரவணவேலின் நடிப்பும் நன்று. கதாநாயகி மோனிஷா மோகனுக்கு வேலையில்லை. முதல்பாதியில் சில காட்சிகளில் தலைகாட்டிவிட்டு காணாமல் போகிறார். படம் முழுவதும் சண்டையிட்டுக் கொண்டும் யாரோ யாரையாவது அடித்துக்கொண்டும் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை குறைத்திருக்கலாம். முதல் பாதி நன்றாக இருந்தாலும் வலுவில்லாத இரண்டாம் பாதி ஏமாற்றம். பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த படங்களை ஞாபகப்படுத்துகிறது.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசையில் பின்னி எடுத்துள்ளார். லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளையும் அழகாக காட்டியுள்ளது. புதுமையான லொகேஷன்கள் நன்றாக உள்ளது. கிருபாகரனின் எடிட்டிங் ஓகே.

இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் அரசியலை ராவாக சொல்ல முயன்றுள்ள இயக்குனர் இரண்டாம் பாதியில் சொதப்பியதால் படமும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. நிறைய படங்கள் நம் ஞாபகத்துக்கு வருவது மேலும் மைனஸாக உள்ளது