ஃபைட் கிளப்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு 

cinema news movie review

ஃபைட் கிளப்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு 

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும், ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்”. திரைப்படம். ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக, இணையதள, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா பேசியதாவது…
ஃபைட் கிளப், மிகப்பெரிய அனுபவம். முதலில் லோகேஷ் பிரதருக்கு நன்றி. இந்தப்படம் பற்றி பேச நிறைய இருக்கிறது. ரீல் குட்ஸ் ஃபிலிம்ஸ் ஆரம்பித்ததிலிருந்தே விஜய்குமாரும் நானும் படம் செய்யப் பேசி வந்தோம். இப்போது இந்த கட்டத்திற்குப் படம் வந்துள்ளது மகிழ்ச்சி. இந்தப்படம் கடந்த ஆண்டு பாதி முடித்திருந்தபோது விஜய் குமார் லோகேஷ் பிரதருக்கு படம் காட்ட வேண்டும் என்றார். அப்போது விக்ரம் சக்ஸஸில் இருந்தார் லோகேஷ். படம் பார்ப்பதற்கு முன்பாகவே விஜய்குமார் பண்ணியிருந்தால் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் நான் வெளியிடுகிறேன் என்றார். எங்களை நம்பி, ஜி ஸ்குவாட் முதல் படைப்பாக எங்கள் படத்தை வெளியிடுவதற்கு நன்றி. நண்பர் ஜெகதீஷ் அவர்களுக்கு என் பெரிய நன்றி இப்படத்தைப்பற்றிச் சொல்ல வேண்டும், அப்பாஸ் இந்தக்கதை சொன்னதிலிருந்து இன்று வரை இப்படத்திற்காக உழைத்து வருகிறார். அவரது டீம் கடின உழைப்பைத் தந்திருக்கிறார்கள். விஜய் குமார் உறியடி வந்ததிலிருந்து இன்று வரை அவரை வியந்து பார்க்கிறேன். அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி. ஒரு திரைப்படமாக புதிய அனுபவத்தைத் தரும்படி இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ரீல் குட் ஃபிலிம்ஸ் தொடர்ந்து நல்ல படங்களை வழங்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகை மோனிஷா மோகன் மேனன் பேசியதாவது..
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு பெரிய மேடையில், இப்படிப்பட்ட படத்தில் இருப்பதை ஆசீர்வாதமாக நினைக்கிறேன். இந்தப்படம் சினிமா காதலர்கள் விரும்பும் படம். மிகவும் அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம். இங்குள்ளவர்களைச் சந்திப்பதே பாக்கியம் என நினைக்கிறேன், இவர்களோடு பணியாற்றியது மகிழ்ச்சி. திரைப்படம் தான் என் கனவு, உதவி இயக்குநராக இரண்டு படங்கள் மலையாளத்தில் வேலைப்பார்த்திருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு வந்த போது, உறியடி விஜய்குமார் என்று சொன்னார்கள், உடனே எனக்குத் தெரிந்த எல்லோரும் கண்டிப்பாக நீ நடிக்க வேண்டும் எனச் சொன்னார்கள். விஜய் குமாருக்குக் கேரளாவில் நிறைய ஃபேன்ஸ் இருக்கிறார்கள். லோகேஷ் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தியா முழுக்க பிரபலமானவர் எங்கள் படத்தை வெளியிடுகிறார் நன்றி. அப்பாஸ் அட்டகாசமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். உங்களுக்கு இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் பேசியதாவது..
2020 ல் இப்படத்தை அறிவித்தோம் கொரோனா, ஷீட்டிங், லோகேஷன் என நிறையப் பிரச்சனை படம் 3 வருடங்கள் ஆகிவிட்டது. விஜய்குமார் சார் நினைத்திருந்தால் வேறு படம் இயக்கப் போயிருக்கலாம் ஆனால் எங்களுக்காகவும் தயாரிப்பாளருக்காகவும் காத்திருந்து, இப்படத்தில் வேலை செய்த விஜய்குமார் சாருக்கு நன்றி. தான் மட்டுமில்லாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் லோகேஷ் சாருக்கு நன்றி. ஆதித்யா சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த படக்குழுவினருக்கு நன்றி. படத்தை அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

நாயகன் விஜய் குமார் பேசியதாவது..
இந்த டைட்டில் ஒரு ஆங்கில பட டைட்டில் மிகப்புகழ் பெற்ற டைட்டில் கல்ட்கிளாசிக், அந்தக்கதை வேறு இந்தக்கதை வேறு ஆனாலும் அதை நம் படத்திற்கு வைக்கலாமா என யோசித்தோம். நாம் ஆத்மார்த்தமாகக் காதலுடன் உருவாக்கியுள்ள படம் அந்தப்படத்திற்குத் தரும் மரியாதையாக இருக்கும் என்பதால் வைத்தோம். நாம் நினைத்த மாதிரி படத்தை உருவாக்க வேண்டும் எனும்போது, அதில் நிறையப் பிரச்சனைகள் வரும் அதற்கான உழைப்பை, நம் அர்ப்பணிப்பைத் தந்து தான் ஆக வேண்டும். லோகேஷ் என் நெருங்கிய நண்பர். நான் எது செய்தாலும் அதைக் கவனித்துப் பாராட்டுவார். இந்தப்படம் விக்ரம் சக்ஸஸ் டைமில், 20 நிமிடம் தயாராகியிருந்தது, அப்போது பார்த்தார். பின்னர் லியோ வெளியீட்டு டைமில் முழுசாக முடித்துவிட்டுக் காட்டினோம் அவர் பேனரிலேயே இந்தப்படம் வெளியாவது மகிழ்ச்சி. அவர் இந்தியாவின் மிகப்பெரிய இயக்குநராக இருக்கிறார், எப்போதும் நாங்கள் சினிமா பற்றித் தான் பேசுவோம். அவர் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. நண்பர் ஜெகதீஷ் மற்றும் சக்திவேலன் சார் இப்படத்திற்கு மிகப்பெரும் ஆதரவாக இருக்கிறார்கள் அவர்களுக்கு என் நன்றி. இப்படத்தில் நிறையப் புதுமுகங்கள் அர்ப்பணிப்போடு வேலை பார்த்துள்ளனர். தயாரிப்பாளர் சினிமா மேல் உள்ள காதலால் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவருக்காக இந்தப்படம் பெரிதாக ஜெயிக்க வேண்டும். அப்பாஸ் ஒரு சினிமா பைத்தியம், சினிமா தவிர அவனுக்கு எதுவும் தெரியாது. தீவிரமான மணிரத்னம் ஃபேன் அவனை இயக்குநராக இந்த உலகம் பாராட்டுவதைக்காண நானும் காத்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது..
இந்தப்படம் மாநகரம் மாதிரி தான், எனக்கு இது ஒரு புதிய தொடக்கம். உங்கள் ஆசியோடு தொடங்க ஆசை. உறியடி விஜய் குமார், அவன் பேரும் என் பேரும் ஒரு படத்தில் ஒன்றாக வர வேண்டும் என்று 2017 லிலிருந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். அது இப்போது நடப்பது மகிழ்ச்சி. எனக்குத் தெரிந்த மிக நேர்மையான மனிதன் விஜய்குமார். எப்போதும் சினிமா பற்றி மட்டுமே சிந்திப்பவன், இந்தப்படத்தை நான் வெளியிடுவது, படக்குழுவிற்குச் செய்யும் நல்லதல்ல, நான் என் கம்பெனிக்கு செய்து கொண்ட நல்ல விசயம் அவ்வளவு தான். இந்தப்படத்தில் அத்தனை பேரும் அவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள், விஜய் குமாரை தவிர இந்தப்படத்தில் பல புதுமுகங்கள் உழைத்துள்ளார்கள். படத்திற்குப் பிறகு எல்லோரும் பெரிதாகப் பேசப்படுவார்கள். நான் படம் செய்ய ஆசைப்பட்ட போது என் நண்பர்கள் தான் பணம் போட்டு குறும்படம் எடுக்க வைத்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஏதாவது செய்வேன் என எவரும் நினைக்கவில்லை. எனக்காக மட்டுமே செய்தார்கள், அதே போல் நான்கு பேருக்கு நான் செய்ய வேண்டுமென நினைக்கிறேன், அவ்வளவு தான், அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம். ஜி ஸ்குவாட் நிறுவனத்தோட அபீசியல் பார்ட்னர்ஸ் ஜெகதீஷ் மற்ரும் சுதன் இருவரும் தான். அவர்களுக்கு நன்றி. நல்ல படங்களைத்தர இந்த நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள். அனைவருக்கும் நன்றி

இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தில் விஜய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்குக் கதையை சசி அவர்கள் அமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்கப் படத்தொகுப்புப் பணிகளைக் கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் – அபுபக்கர் ஆகியோர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். கிரியேட்டிவ் புரடியூசராக விஜய் குமார் பணியாற்றியுள்ளார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை, ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சொந்தமாகத் தொடங்கி இருக்கும் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் முதல் படைப்பாக இப்படத்தை வழங்குகிறார்.