full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

‘ட்ரிப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

பிரவீண், சுனைனா, யோகிபாபு மற்றும் கருணாகரன் ஆகியோருடன் ஏராளமான புதுமுகங்கள் நடித்த சாகசம் மிக்க திரில்லர் ஃபேன்டசி வகைப்படமான ‘ட்ரிப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டெனிஸ் இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. காரணம் அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்த சாகசப் படத்தின் படப்பிடிப்பே சவால்களும் சாகசங்களும் நிரம்பியதாக இருந்ததுதான்.

இது குறித்து விவரித்த இயக்குநர் டெனிஸ்…

“ஒரு வழியாகப் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டோம். சற்றே சவால்கள் மிக்கதாக இருந்தாலும், எங்கள் பணியை நாங்கள் மிகவும்
அனுபவித்து மகிழ்ச்சியுடன்தான் செய்து முடித்தோம். முதல் கட்டப் பிடிப்பு தலக்கோணாவில் நடந்த போதும் சரி, வனப்பிரதேசங்களில் நடந்தபோதும் சரி, முன்னறிவிப்பு எதுவுமின்றி பல்வேறு ஆச்சரியங்களை எதிர்கொண்டோம். பாதகமான பருவநிலையில் ஆரம்பித்து, உதிரத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிவரை பல சிரமங்களை சந்தித்தோம். அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல, புலி ஒன்று எங்களை முறைத்ததையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

ஒரு தீவு போன்ற பகுதியை அடர்ந்த வனப்பகுதியில் எங்கள் படக்குழு தேடியடைந்ததைக் குறிப்பிட்டேயாக வேண்டும். மொத்தப் படக்குழுவும் மூன்று கிலோ மீட்டர் டிராக்டரில் பயணித்தால்தான் இந்த விசித்திரமான இடத்தையே சென்றடைய முடியும். ஒரு படப்பிடிப்பு தளம் என்பதற்கும் மேலாக எங்களுக்கு அமைந்த இந்த இடத்தில் எங்கள் பணிகளைச் செய்து முடித்ததில் இப்போது பெருமைப்படுகிறோம்… பெரும் மகிழ்ச்சியும் அடைகிறோம்… எங்கள் குழுவின் கடின உழைப்பு கண்டிப்பாகத் திரையில் தெரியும் என  முழுமனதுடன் திடமாக நம்புகிறேன். உதட்டளவில் இருந்து வரும் சம்பிரதாய வார்த்தைகள் அல்ல இவை… உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் ஆனந்த சொற்கள் இவை” என்றார் இயக்குநர் டெனிஸ்.

‘ட்ரிப்’ படம் வெளியான பிறகு, அதிரடி ஆக்ஷன் நிரம்பிய படங்களுக்கு பிரவீண் பொருத்தமானவர் என்று கொண்டாடப்படுவது உறுதி என்று தெரிவிக்கும் இயக்குநர் டெனிஸ், படவுலகில் அனுபவம் பெற்ற நடிகை என்றாலும், மிக எளிமையாக இருந்ததற்கும், அர்பணிப்பு மிக்க நடிப்பைத் தந்ததற்கும் சுனைனாவையும் வெகுவாகப் பாராட்டினார்.

வி.ஜே.ராஜேஷ், அதுல்யா சந்திரா, லட்சுமிப்பிரியா, கல்லூரி வினோத், வி.ஜே.சித்து, ஜெனிஃபர் மற்றும் ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘ட்ரிப்’ படம் எதிர்வரும் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. பின்தயாரிப்புப் பணிகள் விரைவில் துவங்கப்பட இருக்கும் இப்படத்துக்கு சித்து குமார்  இசையமைத்திருக்கிறார். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படப்புகழ் உதய் சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு தீபக் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக பாக்யராஜும், சண்டைப் பயிற்சியாளராக டேஞ்சர் மணியும் பணியாற்றுகின்றனர்.