தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபயர்’ இசை வெளியீடு
பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும்.
ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் ‘ஃபயர்’ திரைப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநரும் பிரபல வசனகர்த்தாவுமான எஸ் கே ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை சி எஸ் பிரேம் குமாரும் கலை இயக்கத்தை தேவராஜும் கையாள, பாடல்வரிகளை ‘கே ஜி எஃப்’ புகழ் மதுரகவி இயற்றியுள்ளார், மானஸ் நடனம் அமைத்துள்ளார்.
இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு:
வசனகர்த்தா எஸ் கே ஜீவா பேசியதாவது…
“‘அநீதி’ படத்திற்கு நான் எழுதிய வசனங்களை பார்த்து பாராட்டிய ஜே எஸ் கே அவர்கள்
‘ஃபயர்’ திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை வழங்கினார். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று அறியப்பட்டவர் இயக்குநராகவும் இப்படத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடல் ஆசிரியர், நடன அமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர் இப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் செல்வதற்கு தைரியம் வேண்டும், அது ஜே எஸ் கே அவர்களிடம் உள்ளது அவருக்கும் படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”
கவிஞர் மதுரகவி பேசுகையில்…
“ஒரு இயக்குநராக தனக்கு என்ன தேவை என்பதை வாங்குவதில் ஜே எஸ் கே அவர்கள் கெட்டிக்காரர். இந்த படம் விளிம்பு நிலை மாந்தர்களுக்கான விழிப்புணர்வு படம். இப்படத்திற்கு ஃபயர் என்று ஜே எஸ் கே சார் பெயர் வைத்திருக்கிறார். உண்மையில் அவர் ஒரு பன்முக ஃபயர். பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர். இப்படம் சிறப்பாக உருவாகி உள்ளது. நன்றி.”
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
“தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக ஆகி இருக்கும் ஜே எஸ் கே-க்கு இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள். ஃபயர் படத்தின் முன்னோட்டம் பெயருக்கேற்றார் போல ஃபயர் ஆக உள்ளது. அடுத்தது என்ன என்று ஆவலை தூண்டுகிறது. தேசிய விருதுகள் வென்ற படங்களின் தயாரிப்பாளர் இயக்கியுள்ள முதல் படமும் தேசிய விருது பெறும் என நம்புகிறேன். இதில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”
கவிஞர் ரா பேசியதாவது…
“பாடலாசிரியராக இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ஜே எஸ் கே அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என நம்புகிறேன்.”
நடன இயக்குநர் மானஸ் பேசியதாவது…
“இயக்குநர் ஜே எஸ் கே இப்படத்தில் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். நடிகர்கள் பாலாஜியும் காயத்ரியும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஒரே இரவில் முழு பாடலையும் எடுத்து முடித்தோம். ஆதரவளித்த ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி.”
ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி பாபு பேசியதாவது…
“சிவா சார் மூலம் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அவருக்கு நன்றி. ஏனென்றால் அவர் மூலம் தான் ஜே எஸ் கே சாரின் அறிமுகம் கிடைத்தது. ஒரு ஒளிப்பதிவாளராக அவரை திருப்திப்படுத்தி உள்ளேன் என்று நினைக்கிறேன். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி.”
படத்தொகுப்பாளர் சி எஸ் பிரேம்குமார் பேசியதாவது…
“குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா சாருக்கு நன்றி சொல்லி என் உரையை தொடங்குகிறேன். என்றால் அவர் மூலமாகத்தான் ஜே எஸ் கே சார் எனக்கு பழக்கம். எட்டு வருடங்களுக்குப் பின்னரும் என்னை நினைவு வைத்து இப்படத்தில் பணியாற்ற அழைத்தார். ஒரு குழுவாக இணைந்து இப்படத்தை உருவாக்கி உள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள்.”
நடிகை அனு பேசியதாவது…
“இது எனக்கு முதல் படம், முதல் மேடை. எஸ் கே ஜீவா சார் மூலம் தான் ஜே எஸ் கே அவர்கள் அறிமுகமானார். ஃபயர் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தை செய்துள்ளேன், ஆனால் அது படம் முழுக்க வரும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ஜே எஸ் கே சாருக்கு நன்றி.”
இசையமைப்பாளர் டி கே பேசியதாவது…
“எனக்கு வாய்ப்பளித்த ஜே எஸ் கே சாருக்கு நன்றி. வாய்ப்பளித்தார் என்பதை விட நிறைய கற்றுத் தந்தார் என்று சொல்லலாம். குறிப்பாக ரீ ரெக்கார்டிங்கில் நிறைய நுணுக்கங்களை அவரிடம் இருந்து அறிந்து கொண்டேன். படத்தில் நான் இசையமைத்த ஒரு பாடல் ஆரம்பத்திலேயே அவரது மிகவும் பிடித்திருந்தது. இன்னொரு பாடலுக்கு நிறைய மெனக்கெட்டு அவரை திருப்திப்படுத்த வேண்டி இருந்தது. ஃபயர் படத்தில் பணியாற்றியது ஒரு மிகச்சிறந்த அனுபவம், நன்றி.”
நடிகை சாந்தினி தமிழரசன் பேசியதாவது…
“இப்படத்தில் துர்கா என்ற வேடத்தில் நான் நடித்துள்ளேன். பெண்களுக்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை தாங்கி வரும் படம்தான் ஃபயர். அனைவரும் இப்படத்தை திரையரங்கத்தில் பார்த்து ஆதரவு தர வேண்டும்.”
நடிகை காயத்ரி ஷான் பேசியதாவது…
“சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இது எனது முதல் மேடை. அதற்காக ஜே எஸ் கே சாருக்கு நன்றி. முதலில் கதை கேட்கும் போது பயமாக இருந்தது. ஆனால் முழுவதும் கேட்டு முடித்ததும் மிகவும் பிடித்து இப்படத்தை உடனே ஒப்புக் கொண்டேன். பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கும் ஆண்களை ஏமாற்றும் பெண்களுக்கும் இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.”
நடிகை சாக்ஷி அகர்வால் பேசியதாவது…
“இந்த படம் ஒரு துணிச்சலான முயற்சி. இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான கருத்தை இது சொல்கிறது. அதே சமயம் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது இந்த கருவை கையில் எடுத்ததற்காக ஜே எஸ் கே அவர்களுக்கு நன்றி. அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்.”
நடிகர் பாலாஜி முருகதாஸ் பேசியதாவது…
“இது கிட்டத்தட்ட எனக்கு முதல் படம் மாதிரி தான். களி மண்ணுக்கு மதிப்பில்லை. ஆனால் அதை பானையாகவோ பொம்மையாகவோ செய்தால் அதன் மதிப்பே வேறு. அது போல் என்னை இப்படத்தில் இயக்குநர் ஜே எஸ் கே மற்றும் இதர குழுவினர் செதுக்கி உள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.”
தயாரிப்பாளர் டி சிவா பேசியதாவது…
“நினைத்ததை முடிப்பதில் ஜே எஸ் கே வல்லவர். துணிச்சல் மிகுந்தவர், தன்னம்பிக்கை மிக்கவர், ஆளுமை உள்ளவர், அன்பானவர். அவர் இயக்கிய முதல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சி. பாடல்களும் முன்னோட்டமும் மிகவும் அருமையாக உள்ளன. இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி பேசியதாவது…
“திட்டமிடலுக்கு பெயர் பெற்றவர் ஜே எஸ் கே. என் தந்தையாருக்கு பிறகு இன்றைய காலகட்டத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டில் திட்டமிட்டவாறு படமெடுக்க முடியும் என்று ஜே எஸ் கே நிரூபித்துள்ளார். இந்த படத்தை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். ஃபயர் திரைப்படம் கட்டாயம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருதும் இல்லை.”
நடிகர்-இயக்குநர் பாண்டியராஜன் பேசியதாவது…
ஜே எஸ் கே எப்போதும் ஆச்சரியப் படுத்திக்கொண்டே இருப்பார். சினிமாவில் அவர் தொடாத இடமே இல்லை. திரைப்படங்களை விநியோகித்தார், தயாரித்தார். பின்னர் நடிக்க ஆரம்பித்தார், இப்போது இயக்குநராக உருவெடுத்துள்ளார். அவரது இந்த புதிய முயற்சி மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
ஃபயர் திரைப்படத்தின் இயக்குநர் ஜே எஸ் கே பேசியதாவது…
“என் மீது அன்பு கொண்டு இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இப்படம் உருவாக தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்த எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி. பொதுவாக திரைப்பட நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்காது. ஆகையால் எனது உதவி இயக்குநர்களை ஒரு சில வார்த்தைகள் பேச அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன். இந்த படத்தை இது வரை பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டி உள்ளனர். ஃபயர் அனைவருக்கும் புடிக்கும். வந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி.
***