கொரோனாவால் 100 நாட்களுக்கு மேலாக பட உலகம் முடங்கி உள்ளது. படப்பிடிப்புகள் இல்லாததால் முன்னணி நடிகர் நடிகைகள் தவிர சிறிய வேடங்களில் நடித்து வந்த மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி கஷ்டப்படுகின்றனர். படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் திரையுலகினர் பலர் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். இந்தி நடிகர் சோலங்கி திவாகர் டெல்லியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்கிறார். தமிழில் ஒரு மழை நான்கு சாரல், மவுன மழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய்தான் ஆகிய படங்களை இயக்கி டைரக்டர் ஆனந்த் சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை திறந்துள்ளார். ரோஹன் பட்னேகர் என்ற மராத்தி நடிகர் கருவாடு விற்கிறார்.
இந்த நிலையில் தற்போது மலையாள நடிகர் சுதீஷ் அஞ்சேரி மீன் வியாபாரியாக மாறி இருக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு தமிழ் படத்திலும் நடித்துள்ளார். மிமிக்ரி கலைஞராகவும் இருக்கிறார். பள்ளியில் ஓவிய ஆசிரியராகவும் வேலை பார்த்தார். அவர் கூறும்போது, “ஊரடங்கால் சினிமாவில் வருமானத்தை இழந்து மீன் வியாபாரம் செய்ய வந்துள்ளேன். மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்குவதுவரை மீன் வியாபாரம் செய்வேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மீன் சந்தையில் வேலை பார்த்துள்ளேன்” என்றார்.