சிறுத்தை சிவா – தல அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் `விவேகம்’. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித் ஒரு இண்டர்போல் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்’ படத்தின் டீசர், எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு 12.01 மணிக்கு யூ டியூப்பில் வெளியானது. ஆனால் அதற்கு முன்னதாவே சமூக வலைதளங்களிலும் கசிந்துவிட்டது. எனினும் அஜித் ரசிகர்கள் டீசர் குறித்த தங்களது கொண்டாட்டங்களை முன்னதாகவே தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் இணையதளங்களில் வெளியான `விவேகம்’ டீசர் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டிருக்கிறது. டீசரில் அஜித் பேசும் வசனங்களும், அவரது புதுமையான ஸ்டைலும் அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது.
ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் `விவேகம்’ படத்தின் டீசர், அஜித்தின் பஞ்ச் டயலாக்குடன் தொடங்குகிறது.
“இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட… தோத்துட்ட…ன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது”
என்று `விவேகம்’ படத் தலைப்புடன் (BELIEVE in YOURSELF) அந்த வசனம் முடிகிறது.
இதில் இந்த பஞ்ச் டயலாக்குக்கு ஏற்றவாறு தல அஜித் என்னென்ன செய்கிறார், எப்படியெல்லாம் வருகிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது, வசனம் தொடங்கும் போதே கையில் இரு துப்பாக்கிகளுடன் நின்று சுட்டுக் கொண்டிருக்கும் அஜித், பின்னர் காட்டுக்குள் உலா வருகிறார். பின்னர் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு, டாம் ஒன்றில் நடைபெறும் தாக்குதல் என விறுவிறுப்பு கூட, அழுக்கு உடலுடன் “புல் அப்ஸ்” எடுக்கும் காட்சிகள் தெறிக்க விடுகின்றன.
பின்னர் ஒரு சுரங்கப்பாதைக்குள் திரும்பி நிற்கும்படியான போஸ், ராணுவ உடையில் தல அஜித் முன்னால் நடக்க, மற்ற வீரர்கள் பின்னால் நடப்பது போன்ற காட்சிகள் அவரது மாஸை மேலும் கூட்டியிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து “NEVER EVER GIVE UP” வசனத்துடன் பைக்கில் வந்துக் கொண்டிருக்கும் போதே, துப்பாக்கியால் சுடும் காட்சிகள், மரத்தை ஆக்ரேஷமாக உடைப்பது என டீசர் முடிகிறது.
இந்த டீசரின் மூலம் `விவேகம்’ படத்திற்காக படக்குழுவினர் எவ்வாறு உழைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. சிவாவின் மாஸான இயக்கமும், அனிருத்தின் பின்னணி இசையும் பாராட்டப்படும்படி இருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் வெற்றியின் ஒளிப்பதிவும், எடிட்டர் ரூபனின் கட்டும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்று சொல்லலாம்.