full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சோனி மியூசிக் நிறுவனம் மூலமாக திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்

சிட்டி முதல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் பாடகர் அந்தோனி தாசன். அவரின் சினிமாப் பாடல்களும் நாட்டுப்புறப்பாடல்களும் எல்லாத்தரப்பு மக்களாலும் கொண்டாடப் பட்டு வருகின்றன. சொடக்குப் போடும் நேரத்தில் தன் கிராமியக் குரலால் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தக் கூடிய அந்தோனி தாசன் சோனி மியூசிக் நிறுவனத்தில் ஆர்ட்டிஸ்டாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்தோனி தாசனின் நாட்டுப்புறப் பாடல்களை சோனி நிறுவனம் தரமான முறையில் மக்களிடம் கொண்டுசேர்த்து வருகிறது. மேலும் தற்போது ஒரு புது முயற்சியை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சோனி மியூசிக் நிறுவனமும் அந்தோனி தாசனும் எடுத்திருக்கிறார்கள். திருமணவிழா, மற்றும் குடும்ப விழாக்களில் யாரும் எதிர்பாராத விதமாக அந்தோனிதாசன் மற்றும் அவரது  டீம் உள்ளே சென்று ஒரு மினி கச்சேரியையே நடத்தும் சுவாரஸ்யமான முயற்சி அது. திருமணவிழா மற்றும் குடும்ப விழாக்களில் யாருக்கும் தெரியாமல் யாரிடமும் தகவல் சொல்லாமல் எதார்த்தமாகச் சென்று அந்தோனி தாசன் பாட்டுப் பாடுவார் கூடவே அவரது வாத்தியக்குழுவும் நாதஸ்வரம் மேளம்  போன்றவற்றை இசைக்கும்.
இதை முதல்முறையாக சென்னையில்  திருமணவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் அரேங்கேற்றினார்கள். அந்தோனி தாசன் மற்றும் அவரது வாத்தியக் குழு எதார்த்தமாக செல்வது போல சென்று வாத்தியம் இசைத்து பாட்டுப்பாடியதும், ஒரு திருமணவிழாவின் மணமக்கள் உள்பட அங்கிருந்த அனைத்து மக்களும் நெகிழ்ந்து போனார்கள். பேட்ட படத்தில் இடம்பெற்ற ஆஹா கல்யாணம், பாடலையும், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு மேல பாடலையும் அந்தோனி தாசன் பாட திருமணவிழா மிகப்பெரும் திருவிழா போல கொண்டாட்டமானது. முக்கியமாக திரைப்படப் பாடல்களோடு நாட்டுப்புறப்பாடல்களையும் அந்தோனி தாசன் பாடினார். நாட்டுப்புறப்பாடல்களை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை அந்தத் திருமணவிழாவில் வந்திருந்த விருந்தினர்களின் மகிழ்ச்சியில் காண முடிந்தது.  திருமணவிழாவில் ஒரு பெரிய பாடகர் யாரும் எதிர்பாராத விதமாக வந்து பாடுவது திருமண வீட்டார் உள்பட அங்கிருக்கும் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும். சென்னையில் நடைபெற்ற திருமணவிழாக்கள் மற்றும் குடும்ப விழாவில் மக்களின் அந்தப் பேரின்ப அதிர்ச்சியை கண்கூடாக காண முடிந்தது. அந்த மணமக்களுக்கு காலமெல்லாம் இது ஒரு மறக்க முடியாத சந்தோஷ அனுபவமாக இருக்கும். மேலும் இந்தத் திடீர் மினி கச்சேரி மூலமாக எல்லாத்தரப்பு மக்களிடமும் நாட்டுப்புறப் பாடல்கள் சென்றடையும்.  திருமண விழாவிலும் குடும்ப விழாவிலும் பாடி முடித்ததும் அந்தோனிதாசனை மக்கள் சூழ்ந்து கொண்டார்கள்.
இப்படியொரு புது முயற்சியை எடுத்திருப்பது குறித்து  சோனி மியூசிக் நிறுவனத்தின் தமிழக நிர்வாகி அசோக் பர்வானி கூறியதாவது,
“அந்தோணி தாசன் மாதிரியான திறமையான பாடகர் எங்கள் சோனி நிறுவனத்தோடு இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் நாட்டுப்புறப் பாடல்களை மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது எங்கள் குழுவின் நோக்கம். அந்தோனி தாசன் மூலமாக ஒரு கலையை அதன் பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ளபடியே சோனி மியூசிக் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது” என்றார்.
இதுகுறித்து அந்தோனி தாசன்  கூறியதாவது,
“நம் மண்ணோட பாடல்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கான முயற்சியாக சோனி நிறுவனத்தோடு இணைந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது” என்றார்.