ஈஸ்வரன் படத்தில் சிம்பு பாம்பை பிடித்த வீடியோ மீதான புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்
சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் நடந்தது. படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் சிம்பு கழுத்தில் பாம்பை சுற்றி பிடித்து இருப்பது போன்று போஸ் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் வனப்பகுதியில் மரத்தில் தொங்கும் ஒரு பாம்பை சிம்பு தனது கையால் பிடித்து சாக்கு பையில் போடும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிம்பு துணிச்சலாக பாம்பை பிடித்ததாக வியந்தும், பாராட்டியும் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டனர். சிம்பு பாம்பு பிடிக்கும் வீடியோவை வைரலாக்கவும் செய்தார்கள்.
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள வனவிலங்கு துறை அலுவலகத்தில் சிம்பு பாம்பை பிடித்து துன்புறுத்தியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்திய வன விலங்கு நல வாரியத்துக்கும் புகார் மனு அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் சிம்பு பாம்பை பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டது. புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.