விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பஸ் மறியலில் ஈடுபட்டார். இன்று காலை 9.15 மணியளவில் திருவாரூர் சன்னதி தெருவில் இருந்து பேரணியாக புதிய பஸ் நிலையத்திற்கு நடந்தே சென்றார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் பொய்யாமொழி, மதிவாணன் உள்ளிட்டோரும் சென்றனர்.
புதிய பஸ் நிலையம் அருகில் மு.க.ஸ்டாலின் மறியலில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் கைதானார்கள். பின்னர் போலீஸ் வாகனத்தில் ஏறும் படி மு.க.ஸ்டாலினிடம் போலீசார் கூறினர். ஆனால் மு.க.ஸ்டாலின் நாங்கள் நடந்தே வருகிறோம் என்றார்.
அதன்படி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன் தமிழ் திருமண மண்டபத்திற்கு நடந்தே சென்றனர். அனைவரும் மண்டபத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முழு அடைப்பு போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலின், “திருவாரூரில் பேரணி நடந்தது மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருகின்றனர். முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு தவறான தகவல் தருகிறது. விவசாயிகள் பிரச்னைகள் பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும்.” என்று கூறினார்.