கடமையாற்ற களத்திற்கு அழைக்கும் ஜி வி பிரகாஷ்

News
0
(0)

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களை விரைவில் மீட்டுத்தர வலியுறுத்தி மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நடிகர் ஆரியும், இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷூம் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

அதனைத் தொடர்ந்து ஜி வி பிரகாஷ், கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம் என்று கன்னியாகுமரி மீனவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அது குறித்து தெரிவித்துள்ள ஜி.வி.பிரகாஷ், “வடகிழக்கு பருவமழையால் வழக்கம் போல் சென்னைக்கு இந்த ஆண்டு என்ன நேருமோ? பெருமழை வருமோ அல்லது கொடும் புயல் தாக்குமோ? என நாம் எல்லோரும் வானிலை முன்னறிவிப்புகளை விடாமல் பார்த்துக்கொண்டிருக்க புயலோ யாரும் எதிர்பாராமல் கன்னியாகுமரியை புரட்டிப்போட்டுச் சென்றுள்ளது.

நவம்பர் 30-ம் தேதி வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் பேரழிவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. அங்கே, இன்னமும் அதற்கான சுவடுகள் இருக்கின்றன.

விழுந்த கம்பங்கள்; சேதமடைந்த சாலைகளைத் தாண்டி உறவுகளைத் தொலைத்து அழுவதற்கு கண்ணீர்கூட வற்றிப்போயுள்ள மீனவ மக்களின் கண்கள் ஒகி புயலின் சாட்சியாக உள்ளன. ஒகி புயல் கன்னியாகுமரியில் ஆடிய கோரத் தாண்டவத்தை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

உறவுகளை தொலைத்துவிட்டு அவர்கள் எழுப்பிய கூக்குரல் என்னை அங்கே செல்ல உந்தியதால் கடந்த 10-ம் தேதி (டிசம்பர் 10) அங்கு சென்றேன். ஒரு நாள் பயணம்தான்.. கனத்த இதயத்துடன் திரும்பியிருக்கிறேன்.

கன்னியாகுமரிக்குச் சென்றேன். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பணம் மேற்கொண்டேன். ஊரெங்கும் ஒரே அழுகைச் சத்தம். “எங்களுக்கு நிவாரணம் எல்லாம் வேண்டாம்.. எங்கள் உறவினர்களை திரும்ப அழைத்துவந்தால் போதும்” என்ற புலம்பல் ஒருபுறம்.

“ஐயா… கடலில் உடல்கள் மிதக்கிறதா சொல்றாங்க.. அந்த உடல்களையாவது மீட்டுக்கொடுங்கள்” என்ற கண்ணீர் மறுபுறம். சிறு பிள்ளைகள்கூட பதாகை ஏந்தி போராட்டளத்தில் கண்ணீருடன் அமர்ந்திருந்தது பார்ப்பதற்கே நெஞ்ச்சை பிளப்பதாக இருந்தது.

“புதுசா புதுசா தொழில்நுட்பம் எல்லாம் வந்திருச்சுன்னு சொல்றாங்க… ஆனா, புயல் வர்றதுக்கு ஒரு நாளைக்கு முன்னாலதான் சொல்றாங்க. கொஞ்சம் முன்னாலேயே சொல்லியிருந்தா கடலுக்கு அனுப்பியிருக்கமாட்டோமே” என்று கதறுகிறார் ஒரு பெண்மணி.

அவர்களிடம் பதில் சொல்ல முடியாத ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. எங்கள் கண்ணீர் மற்றவர்களை கரைக்காதா.. எங்கள் உறவுகள் கரை சேராதா என்று பெண்கள் கதறி அழுவது என்னையும் கண்ணீர் சிந்த வைத்தது.

சென்னையில், டிசம்பர் 2015-ல் பெருமழை ஏற்பட்டபோதும் சரி, டிசம்பர் 2016-ல் வார்தா புயல் புரட்டிப்போட்டபோதும் சரி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் பெருமளவில் வந்து ஆதரவு தெரிவித்து களப்பணியாற்றியது ஆறுதல் அளித்தது.

ஒரு பிரச்சினையின்போது கரம் கொடுப்பவரே மனிதம் நிறைந்தவர். இப்போது நாம் அனைவரும் நம் மனிதக் கடமையாற்ற குமரி நோக்கிச் செல்லவேண்டும். அங்கே கடலில் குதித்து தேடும் பணி நமக்கு சாத்தியமில்லாமல் போகலாம்; ஆனால் அங்கே கண்ணீர் சிந்தும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லலாம்.

வழிதெரியாமல் விழிகள் வறண்டு நிற்கும் நம் உறவுகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்யலாம். நிவாரணம் ஏதும் தேவையில்லை என அவர்கள் சொன்னாலும் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபரை இழந்து நிற்பவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாவது தேவை என்பதே நிதர்சனம். பொறுப்புள்ள இளைஞர்களாக நாம் கடமையாற்ற அங்கே களம் இருக்கிறது.

ஒரு வீட்டில் 4 பெண்கள், அந்த நான்கு பேருமே ஒகி புயலுக்கு தத்தம் கணவரை பறிகொடுத்துள்ளனர். இப்படி நூற்றுக்கணக்கான சகோதரிகள் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கதியாக நிற்கின்றனர்.

அரசாங்கம் அதன் வழியில் உதவட்டும்; நாம் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம். கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.” என்று கூறியுள்ளார்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.