ஒரு பெண்ணை மர்மான மனிதர் ஒருவர் கொலை செய்கிறார். இதிலிருந்து படம் தொடங்குகிறது. நாயகி டாப்சி புது வருட கொண்டாட்டத்தின் போது நடந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருக்கிறார். இவருக்கு இருட்டை கண்டாலே பயம். இதிலிருந்து விடுபட முயற்சி செய்து வரும் நிலையில், கையில் டாட்டூ ஒன்றை குத்துகிறார்.
நாளடைவில் அந்த டாட்டூ அவருக்கு வலிக்க ஆரம்பிக்கிறது. டாட்டூ குத்தியவரிடம் இதைப்பற்றி விசாரிக்க, இறந்த பெண்ணின் அஸ்தியில் இருந்து இந்த டாட்டூவை உருவாக்கியதாகவும் அதை தவறாக உங்களுக்கு குத்திவிட்டதாக கூறுகிறார். யார் அந்த பெண் என்று டாப்சி விசாரிக்க ஆரம்பிக்கிறார். மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறார் டாப்சி.
இந்நிலையில், அந்த மர்ம நபர்கள் டாப்சியை துரத்துகிறார்கள். இறந்த பெண்ணும் டாப்சி கனவில் வர ஆரம்பிக்கிறார்? மர்ம நபர்களிடம் இருந்து டாப்சி எப்படி தப்பித்தார்? கனவில் வரும் இறந்த பெண் என்ன செய்கிறாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் டாப்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்திற்கு நினைத்து பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு பாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். துடிதுடிப்பான பெண், மர்மங்களால் பாதிப்புக்குள்ளாகும் பெண் என்று நடிப்பில் பரிமாணங்களையும் காட்டுகிறார்.
டாப்சியின் உதவியாளராக வினோதினி, ஆர்பாட்டம் இல்லாமல் அசத்தலான நடிப்பு. உளவியல் நிபுணராக அனிஷ் குருவில்லா, அமுதாவாக சஞ்சனா நடராஜன், அவர் அம்மாவாக பார்வதி டாட்டூ நிபுணராக ரம்யா ஆகியோர் கதைக்கு சரியான தேர்வுகள். இவர்கள் அனைவரும் தேவையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
வீடியோ கேம் பின்னணியில் அதைப்போலவே ஒரு கதையை உருவாக்கி பரபரப்பான திரைக்கதையால் விறுவிறுப்பான படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின். படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை ஒரு படபடப்பு தொடர்வது படத்தின் பலம். தனியாக இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பலாத்கார வீடியோக்களால் பாதிக்கப்படும் பெண்கள் என நடப்பு சம்பவங்களை வைத்து கதையை உருவாக்கியதற்கு இயக்குனருக்கு பாராட்டுகள். பேய், கிரைம் கலந்த உளவியல் திரில் படமாக இருந்தாலும் படம் முடியும்போது சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
படத்தின் கதாநாயகனே ரான் ஈதன் யோகனின் இசைதான். டாப்சியின் உணர்வுகளை அப்படியே பின்னணி இசையாக்கி நமக்கு கடத்துகிறது. வசந்தின் ஒளிப்பதிவும் ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பும் திகில் கூட்டுகின்றன.
மொத்தத்தில் ‘கேம் ஓவர்’ சிறந்த கேம்.